முன்னாள் அமைச்சர் ஏமாற்றியதாக கொடுத்த புகார்.. நடிகை திடீர் பல்டி.. வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அளித்த புகாரை துணை நடிகை சாந்தினி திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகை சாந்தினி சார்பில் இந்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தன் மீதான புகழுக்கு களங்கம் விளைவித்ததாக அவர் சார்பில் புகார் அளித்தால் என்னவாகும் என்று கண்டனம் தெரிவித்து நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications