கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்தது மத்திய அரசு?
சென்னை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக வெளியான தகவலை சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் மெட்ரோ திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்து திட்டத்தை தொடர்வோம் என்றும் தெரிவித்துள்ளது.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்துவிட்டு பாஜக அரசு ஆளும் மாநிலங்களில் சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதித்ததாக தகவல்கள் வெளியாகின. அதாவது ஆக்ரா, நாக்பூர், புனே, கான்பூருக்கு மெட்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாக சொல்லப்பட்டது.
கோவை, மதுரையில் போதிய மக்கள் தொகை இல்லை என்பதை காரணம் காட்டி மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக சொல்லப்பட்டதை சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு இல்லை. அந்த திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ சார்பில் பதில் அளிக்கப்படும்.
மேலும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், மக்கள்தொகை அடிப்படையில் நிறுத்த வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் தற்போது 54 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ள மெட்ரோ ரயில்களில் தினந்தோறும் ஏராளமான பயணிகள் பயணிக்கிறார்கள். மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை 49-ஆக உள்ளது.
சென்னையில் இரண்டாவது கட்டமாக, மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் - சோழிங்கநல்லுார் என, மூன்று வழித்தடங்களில் 118 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை, தற்போது மாநில அரசின் பரிசீலனையில் இருக்கிறது. மாநில அரசு ஒப்புதலுக்கு பின், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னையை தொடர்ந்து, இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டு, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அறிக்கை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதில் நெல்லை நகரம், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உகந்தது அல்ல என ஆய்வு செய்யப்பட்டது. அது போல் சேலம், திருச்சி குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை தயார் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் மதுரை திட்ட அறிக்கை 936 பக்கத்திலும் கோவைக்கு 655 பக்கத்திலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரித்தது. அதில் ரயில் நிலையங்களின் வகைகள், செலவுகள், செயல்படுத்தும் முறைகள், ரயில் நிலைய அமைவிடங்கள் உள்ளிட்ட மொத்த விபரங்களும் இடம் பெற்றிருந்தன.
மதுரை திருமங்கலம்- ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தவிருந்தது. 27 கி.மீ. மேம்பால பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும் 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமையவிருந்தது.
கோவையில் 39 கி.மீ. தூரத்தில் அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையும் உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் மேம்பால பாதையில் பாதை அமைகிறது. மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கவிருந்தது.
மதுரையில் 11,360 கோடியிலும் கோவையில் 10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கைகளை ஆய்வு செய்த தமிழக அரசு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்த நிலையில்தான் மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல்கள் கிடைத்தன. ஆனால் இதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications