எங்கும் வெள்ளம் மின்தடை...மின்விநியோகம் எப்போது சீராகும் - செந்தில் பாலாஜி சொல்வதென்ன
மழை நீர் வடிந்த பின்னர் மின்விநியோகம் சீராகும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தண்ணீரில் மக்கள் தத்தளிக்கின்றனர். மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் தலைநகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. மழை நீர் வடிந்த பின்னர் மின்விநியோகம் சீராகும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை இன்றும் நாளையும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வெள்ளம்
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்
தொடர்மழையால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. மாம்பலத்தில் இருந்து தியாகராயநகர் செல்லக்கூடிய துரைசாமி சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு பூந்தமல்லி சாலை இணைக்கும் சுரங்கப்பாதை என சென்னையில் நேற்று 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈவேரா சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து , நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈவேரா சாலை காந்தி இர்வின் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் பாந்தியன் சாலை வழியாக செல்லலாம் . மார்ஷல் ரோட்டிலிருந்து பாந்தியன் ரவுண்டாவை நோக்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
பெருமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது.

வெள்ள நிவாரண முகாம்
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், மின் கசிவு ஏற்படாத வகையில் பார்த்து கொள்ளவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

செந்தில்பாலாஜி பேட்டி
இதனிடையே மழை வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் பலபகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரம் நிறுத்தப்பட்டது ஏன் என்று விளக்கம் அளித்தார்.
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்கசிவால் உயிரிழப்பு ஏற்பாமல் தடுக்கவே மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

எங்கெங்கு பாதிப்பு
சென்னையில் 0.27 சதவிகிதம் பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் மழைநீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் வெள்ளநீர் சீராகும் என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேற்கு மாம்பலம், வள்ளுவர் கோட்டம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். முன்னேற்பாடு நடவடிக்கை காரணமாக மின்சாரத்தால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாகவும், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கவே மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications