ஊதா கலரில் ஜொலிக்கும் ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம்.. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை ஊதா நிறத்தில் இன்று ஒளியூட்டப்பட்டுள்ளது.
சென்னையை மேம்படுத்தவும் அழகுபடுத்தவும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழும் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சில திட்டங்கள் சென்னையை மேம்படுத்த மட்டுமின்றி, முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடும் வகையிலும், பல்வேறு விவகாரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் எழில்மிகு சென்னை என்ற திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.1.75 கோடி செலவில் இந்த வண்ண விளக்குகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவை சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட சிறப்புத் தினங்களின் போது, ஒளியூட்டப்படும். இது மட்டுமின்றி, சிறப்பு நாட்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ரிப்பன் மாளிகை கட்டிடம் ஒளியூட்டப்படுகிறது.

ஊதா நிறம்
அதன்படி இன்றைய தினம் சென்னை ரிப்பன் மாளிகை ஊதா நிறத்தில் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை" முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடும் வண்ணம் சென்னை ரிப்பன் மாளிகை இன்று ஊதா நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரிப்பன் மாளிகை
ரிப்பன் மாளிகை மட்டுமின்றி நேப்பியர் பாலம் ஊதா நிறத்தில் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடும் வகையில் இவை ஊதா நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ள நிலையில், ரிப்பன் மாளிகையும் நேப்பியர் பாலமும் அட்டகாசமாக ஊதா நிறத்தில் ஜொலிக்கின்றன. இதைப் பலரும் தங்கள் இணையத்திலும் பகிர்ந்துள்ளனர்.

மெரினா நடைபாதை
மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிக்க ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக இந்த நடைபாதை அமைக்கப்பட்ட நிலையில், அது இப்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், மணற்பரப்பில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிரமம் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்
உலகில் மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் 1992 முதல் டிச.3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஐநா சபையே இதை முதலில் முன்னெடுத்தது. மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கி வைக்கலாம், அவர்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.












Click it and Unblock the Notifications