நூல் நூலா ஆட்டுக்காலில்.. மட்டன் கடைக்குள் நுழைந்ததுமே திணறிய ஆபீசர்ஸ்.. விழித்த சென்னை சைதாப்பேட்டை
சென்னை: சென்னை சைதாப்பேட்டை கறி கடையில் நடந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உணவுப்பிரியர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, "வடமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ மட்டன் ரூ.900 வரை விற்கப்படுகிறது. ஆனால் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்தால், ரூ.500-க்கு கிடைக்கிறது.

டபுள் லாபம்: இந்த இரட்டை லாபத்தை கணக்கிட்டு, ரயிலில் பாதுகாப்பற்ற முறையில் இறைச்சியை கொண்டுவந்து விற்கிறார்கள்.. மட்டன் கெட்டுப்போகாமல் இருக்க, ஐஸ் கட்டிகளின் மீது கெமிக்கலை செலுத்தி, பார்சல் செய்துவிடுகிறார்கள். இதனால், நீண்ட நேரம் இறைச்சி கெட்டுப்போகாமல் கொண்டு வரப்படுகிறது.. இந்த கெமிக்கல் கலந்த மட்டனை சாப்பிடும்போது, வயிற்று போக்கு, வாய்ப்புண், வாந்தி, வயிற்று எரிச்சல், ஒவ்வாமை, தலை சுற்றல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேசமயம், இதுபோன்று கொண்டுவரப்படும் இறைச்சியில் கெமிக்கல் கலக்கப்பட்டு உள்ளதா? என்பதை கண்டுபிடிப்பதும் கடினமான விஷயம்.. சமைக்கும் முன்பு, இறைச்சியின் தன்மையை வைத்துதான், கெமிக்கல் கலந்ததை கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டறியப்பட்டால், அவைகளை உடனே அகற்றிவிட வேண்டும். கெட்டுப்போன இறைச்சிகள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
கண்டுபிடிப்பதில் சிரமம்: இதையெல்லாம் யார் அனுப்புகிறார்கள்? யாருக்கு அனுப்புகிறார்கள்? என்றே தெரியவில்லை.. ஆனால், இப்படி கெட்டுப்போன உணவுகள் ஓட்டல்களில் வழங்கப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.. முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சீல் வைத்து, அதன் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், இவ்வளவு எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்தும்கூட, ஆங்காங்கே ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சியையே பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதனால்தான், அதிகாரிகள் விடாமல், சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இறைச்சி கூடங்கள், மீன் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், நடைபாதை கடைகள் என ஒன்றுவிடாமல் சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
விற்பனை: அந்தவகையில், இன்று சைதாப்பேட்டையில் உள்ள இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான், ஆட்டுக்கால் விற்பனை செய்த கடைக்குள் நுழைந்த அதிகாரிகள், அந்த இடத்தை சுற்றிலும் பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆயிரக்கணக்கான ஆட்டுக்கால்கள் இருந்ததாம்.. அத்தனை கால்களும் கெட்டுப்போய் இருந்திருக்கின்றன.. இவைகளை பதப்படுத்தி, விற்பனைக்காக வைத்திருந்தனர்.. 300 கால்களுக்கு மேல் விற்கப்பட்ட நிலையில், அதற்குள் அதிகாரிகள் அந்த கடைக்குள் நுழைந்துவிட்டார்கள்..
அதிர்ச்சி: விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன சுமார் 700 கிலோ ஆட்டுக்கால்களையிம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கெட்டுப்போன ஆட்டுக்கால்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அத்துடன், அந்த கடையையும் இழுத்து பூட்டி சீல் வைத்தனர். சைதாப்பேட்டை மார்க்கெட்டில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் மிகப்பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications