சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாடம் நடத்துவது மட்டுமல்ல.. மாடித் தோட்டம் போட்டு காய்கறி வளர்த்து அசத்தும் பள்ளி!

Google Oneindia Tamil News

சென்னை: கற்றலில் ஒரு விஷயம் மனதில் பதிய பள்ளிதான் சரியான இடம். இதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள எஸ்பிஓஏ பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி.

பள்ளிக்குள் நுழையும்போதே மரம், செடி, கொடிகள் கண்களை கவர்வது ஒரு புறம் இருக்க, கூடு கட்டிய குருவிகள், கிளிகள், வான்கோழிகள், அன்ன பறவைகள் சப்தமிடும் கீச் கீச் ஒலிகள் இசையாக குளிர்விக்கின்றன. பள்ளியா, பூங்காவா என்று ஒரு சந்தேகம் எழுந்தாலும், பள்ளிதான் என்பதை உறுதி செய்ய மாணவர்கள் சப்தம்... இது ஒரு பசுமைப் பள்ளி.

வீட்டில் மொட்டை மாடியை துணி காய போடவும், வற்றல் வடாம் பிழியவும் பயன்படுத்தினால் உங்களுக்குத்தான் நஷ்டம் என்பதை உணர்த்துகிறது இந்த பள்ளியின் மொட்டை மாட்டித் தோட்டம். வீட்டை சுற்றி இடம் இருந்தாலும் பூமித்தாயின் மடியை குளிர்விக்க செடி, கொடி, மரங்களை வளர்க்க வேண்டும் என்பதையும் மாணவர்கள் கற்றுக்கொள்ளும்படி, புல்தரை, மரங்கள், செடிகள், கொடிகள், மூலிகைத் தோட்டம் என்று பள்ளிக்குள் பசுமை படர்ந்திருக்கிறது.

 காய்கறிகள் எப்படி கிடைக்குது?

காய்கறிகள் எப்படி கிடைக்குது?

ரொம்ப வித்தியாசமா இருக்கே இந்த கான்செப்ட் என்று பள்ளி முதல்வர் ராதிகாவிடம் கேட்டோம்.. மெல்ல சிரித்தபடி தொடர்ந்தார்.. மொத்த பள்ளி வளாகம் ஆறரை கிரவுண்டு. கீழேயே எப்போதும் மரம், செடி, கொடிகள் வளர்ப்பது உண்டு. பறவைகள் அதில் கூடு கட்டி வாழும், அதோடு, நாங்களும் கிளிகள், புறாக்கள், குருவிகள், வான்கோழிகள்னு வளர்க்கறோம். பிள்ளைகள் காய்கறிகள் எப்படி கிடைக்குதுன்னு தெரிஞ்ச்சுக்கணும், இது இந்த காலத்துக்கு ரொம்ப முக்கியம். இல்லேனா இவங்களுக்கு விவசாயம்னு ஒண்ணு இருப்பதே தெரியாம போயிரும்னுதான் 5 வருஷத்துக்கு முன்னால ஒரு கிரவுண்டு கட்டிடத்தின் மொட்டை மாடியில தோட்டம் போட ஆசை வந்து, சென்னை பெரு நகர தோட்டக்கலை வளர்ச்சித் துறையை நாடினோம். அவங்க எல்லா விதத்துலயும் எங்களுக்கு உதவியாயிருந்தாங்க.

 மண் தொட்டி வெயிட்

மண் தொட்டி வெயிட்

குறிப்பா மொட்டை மாடியில மண் தொட்டி அமைச்சு தோட்டம் போட்டா வெயிட் தாங்காதுன்னு, கோணிப் பையில் தேங்காய் நாரை சிறு துகள்களாக அதோடு கொஞ்சம் மண் சேர்த்து அடைத்துத் தருகிறார்கள். அது மண்போல மக்கிவிடுகிறது. இதில் விதைகள், செடிகளை வைத்து பராமரிச்சா மாடித் தோட்டம் ரெடி. மாடியில ரொம்ப வெயில் தாக்காதபடி வலை அமைச்சு இருக்கோம். பீட்ரூட், கேரட், நூல்கோல், காலிஃபிளவர் எல்லாம் மலை பிரதேசத்தில்தான் வளரும் என்று நினைக்கிறாங்க . ஆனா, எங்கள் பள்ளியில் கத்திரி, வெண்டை, பாகற்காய், கொத்தவரை, தக்காளி, அவரை போன்ற நாட்டு காய்கறிகளுடன் கேரட், பீன்ஸ், பீட்ரூட், காலிஃபிளவர் எல்லாமே விளையுது.

 தூதுவளையில ஆரம்பிச்சு

தூதுவளையில ஆரம்பிச்சு

தூதுவளையில ஆரம்பிச்சு அனைத்து கீரை வகைகள், அழகு பூச்செடிகள், வெற்றிலை, கற்பூர வள்ளி, துளசி போன்ற மூலிகை செடிகள்னு எதையும் நாங்க விட்டு வைக்கல. செயற்கை உரம் போடுவதில்லை. இலைகளை சேகரிச்சு மக்க வச்சு உரமாக்கி போடுவோம். சில சமயம் இலைகளோடு வெல்ல கரைசலை சேர்த்து மக்க வைப்போம், மண்புழு உரம் கிடைக்கும். செடிகளுக்கு இதைத்தான் பயன்படுத்தறோம்.

 ஆர்வம் இருக்கறவங்க

ஆர்வம் இருக்கறவங்க

மாணவர்களை தோட்ட வேலை செய்ய விடறதில்லை. ஆர்வம் இருக்கறவங்க தாங்களா முன்வந்து தண்ணீர் ஊத்துவது, உரம் வைப்பது, விதை போடறதுன்னு செய்வாங்க. விவசாயம்னா என்ன, காய், கனிகள் நமக்கு எப்படி கிடைக்குதுன்னு தெரிஞ்சுக்க மாணவர்கள் வாரத்துல ஒரு நாள்னு குரூப் குரூப்பா பார்வையிடுவாங்க.

பெருமிதம்

பெருமிதம்

குறிப்பா எல்.கே.ஜி, யூ.கே.ஜி,முதல் வகுப்பு குழந்தைகளுக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கு. என்கிறார் ராதிகா. பள்ளியில் மாட்டித் தோட்டத்தை பார்க்கும் மாணவர்கள் தங்களது வீடுகளிலும் இது போல தோட்டம் அமைத்துள்ளார்களாம். வீட்டுக்கு வெளியே இடமிருந்தால் மரக்கன்று நடுவது, செடிகள் நட்டு வைப்பது என்று மிக ஆர்வமாக இருப்பதாகவும் பெருமிதம் கொள்கிறார் இவர்.

 ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு

இந்த பள்ளியின் தோட்டப் பராமரிப்புப் பணிகளில் கண்காணிப்பாளராக இருப்பவர் ஆசிரியர் உதய சங்கர், மேற்பார்வையாளராக ஆனி டீச்சர் இருக்கிறார்கள். கோதை ஜெயராமன் பள்ளியில் பணிபுரிவதோடு, பல்வேறு சமூக சேவைகளும் செய்து வருகிறார். அதுவும் சரிதான்.. மொட்டை மாடியில துணி, வத்தல், வடாம் காயப்போட்டுக்கிட்டே இருந்தா காய், கீரை வாங்கும் செலவை மிச்சப்படுத்துவது எப்படி?.. நாமும் மொட்டை மாடிக்குப் போவோம்.. காய்கறி வளர்ப்போம்.. சேமிப்போம்.. கூடவே ஆரோக்கிய வாழ்வும் வாழ்வோம்.

English summary
Annanagar West extension SBOA school and Junior college is playing as role model to other schools in Chennai by having a roof top veg garden in their school campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X