நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சந்திப்பு
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழு சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தாக கூறப்படுகிறது.
சிதம்பரத்தில் உள்ள ஆடல்வல்லான் நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள். நடராஜரின் பொற்சபையாகவும் போற்றப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்தக் கோவில் சமீப காலமாக அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதாவது, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு விசாரணை செய்தது. பின்னர், கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவித்தது. இது குறித்து அரசாணையை கடந்த வருடம் மே மாதம் வெளியிட்டது. அதன்பிறகு நிதி மோசடி, குழந்தை திருமணம் என சிதம்பரம் நடராஜர் கோவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. இப்போது கனகசபை விவகாரம் மீண்டும் எழுந்துள்ள நிலையில் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க தமிழ்நாடு அறநிலையத்துறை முயன்று வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிமீறல் நடக்கும்போது அரசு தலையிடும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு மீண்டும் மாநில அரசு தொந்தரவு அளித்தால், நானே அங்கு சென்று போராட்டம் நடத்துவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இப்படி சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் திமுக- பாஜக அரசியல் மோதலுக்கு வித்திட்டுள்ளது.
இநத நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழு சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தனர். நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில் மூன்று தீட்சிதர்கள் இருந்தனர். இந்த சந்திப்பின் போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications