அதிகாலையில் வெடித்துச் சிதறிய டீக்கடை.. 8 பேர் காயம்.. உடனடி நிவாரண உதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபீக் என்பவரின் டீக்கடையில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பார்வதிபுரம் டீக்கடை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்தவர் ஷபீக். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் தேநீர்க்கடை வைத்துள்ளார். இந்தக் கடை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலையில் டீக்கடையில் பணிபுரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த மூஸா (48) என்பவர் வடை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது சமையல் கேஸ் சிலிண்டர் காலியானது.

மளமளவென தீ
இதையடுத்து, டீக்கடை பணியாளர் மூஸா, புதிய சிலிண்டரை மாற்றிவிட்டு, அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் பயந்து போன மூஸா அங்கிருந்து வெளியே வந்துள்ளார். அதற்குள் தீ மளமளவென்று பரவி டீக்கடையில் வடை போட வைத்திருந்த எண்ணெய்ச் சட்டியில் பிடித்துள்ளது இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

வெடித்த சிலிண்டர்
இதையடுத்து கடை ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டபோது கடையில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் கடையின் வெளியே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலரின் மீதும் தீப்பற்றியது.

8 பேர் காயம்
இதில் கடை ஊழியர்கள் 3 பேர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்த கடை ஊழியர்கள் மூஸா (48), பிரவீன் (25), சேகர் (52) மற்றும் சுசீலா (50), பக்ரூதீன் (35), சுப்பையா (66), சுதா (43), சசிதரன் (62), ஆகிய 8 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடை எரிந்து சாம்பல்
தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், டீக்கடையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டாலின் வருத்தம்
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபீக் என்பவரின் தேநீர் விடுதியில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த தீவிபத்தில் தேநீர்விடுதியில் வேலைபார்த்து வந்த 8 நபர்கள் தீக்காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியினை கேட்டு வருத்தமுற்றேன்." எனத் தெரிவித்துள்ளார்.

நிவாரண உதவி
மேலும், "தீக்காயமடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications