"தமிழ்நாடு என்று சொல்லக் கூடாதென ஒருவர் புலம்புகிறார்" முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை: யாரோ ஒருத்தர் தமிழ்நாடு என்று சொல்லக் கூடாதென புலம்பிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு பெயர்சூட்டு விழாவில் கலந்துகொண்ட போது, அண்ணாவின் பேச்சை குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவின் வரலாற்றை இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கடந்த சில நாட்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி - திமுக இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு என்று அழைப்பதைவிடவும், தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் சட்டசபை செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்த நிலையில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை 2.0 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதியின் செயல்பாடுகள் தந்தையாக மகிழ்ச்சி அளிப்பதாகவும், தலைவனாக பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

வரலாறு முக்கியம்
தொடர்ந்து, திமுக தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் திமுகவின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். திராவிட மாடல் என்று ஒவ்வொரு மேடைகளிலும் முழங்கி கொண்டிருக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழ்நாடு எப்படி இருந்தது, 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு எப்படி இருந்தது, திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாடு எப்படி மாறியது, அதற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். வரும் தலைமுறையினருக்கு அதனை கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காகதான் திராவிட பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

திமுகவுக்கு எதிரான பிரச்சாரம்
கடந்த பொதுக்குழுவில் பேசும் போது, தொகுதிவாரியாக இல்லாமல் ஒன்றியம், நகரம் வாரியாக திராவிட பயிற்சி பாசறையை நடத்த உத்தரவிட்டேன். திமுக ஆட்சியின் சாதனைகள் மக்களுக்கு சேர்ந்திட வேண்டும். இதற்கு, நவீன பிரச்சாரம் தான் காரணம். ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் திமுகவுக்கு எதிரான திட்டமிட்டு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நாம் முறியடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அண்ணா பற்றி மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து, திமுக இளைஞரணி விழாவுக்காக ஒருமுறை அண்ணாவை சந்திக்க சென்றோம். அப்போது அண்ணா உடல்நிலை சரியில்லை. அப்போது அண்ணாவின் மணிவிழாவுக்காக தேதி கேட்டேன். உடனடியாக கொடுத்தார். ஆனால் உடல்நிலை சரியில்லாததால், அமெரிக்காவில் சிகிச்சை பெற கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் எந்த நிகழ்ச்சியில் அண்ணா பெரிதாக கலந்துகொள்ளவில்லை. ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொண்டார். என்ன நிகழ்ச்சி தெரியுமா, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய விழாவில் கலந்துகொண்டார்.

இந்த உயிர் இருந்து என்ன பயன்?
அண்ணாவின் உடல்நிலை காரணமாக தமிழ்நாடு பெயர்சூட்டும் விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அண்ணாவுக்கு குடும்பத்தினர், மருத்துவர்கள் என பலரும் அறிவுறுத்தினார்கள். அவையனைத்தையும் மீறி அண்ணா வந்ததாக விழாவில் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று கூறியதற்கு, தமிழ்நாடு என்று பெயர்சூட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றால், இந்த உயிர் இருந்து என்ன பயன் என்று சொன்னார். இன்று யாரோ, தமிழ்நாடு என்று சொல்லக் கூடாதென புலம்பிக் கொண்டிருக்கிறாரே, அதற்கு மேல் விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சால், தொண்டர்களிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications