உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள்.. கல்வியை தொடர உதவுங்கள்.. பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,000 பேரும் அடக்கம். கடந்த பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பினர். போர் தொடர்ந்து நீடித்து வருவதால் மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

இதனிடையே உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய மாணவர்கள், தங்களை இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஏராளமான மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் உக்ரைன் மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டத்தில் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் உக்ரைனில் நிலவும் போர் காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பிய மாணவர்கள் உள்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். வெளிநாடுகளில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காண கட்டமைப்பு ஏற்படுத்தி வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications