திராவிட மாடல், உடன்பிறப்பு அப்டின்னா இதான்! பட்ஜெட் விளக்க கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
செங்கல்பட்டு: கடந்த 10 ஆண்டுகளில் பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை திமுக அரசு தலைநிமிர வைத்துள்ளதாக பட்ஜெட் விளக்க கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.
மறைமலைநகரில் நடைபெற்ற திமுகவின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவரது முன்னிலையில் 27.850 பேர் திமுகவில் இணைந்தனர்.
"அப்போது அவர், திமுக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கும் வகையில் பொதுக்கூட்டத்தை கூட்டவே உத்தரவிட்டோம் ஆனால், இங்கு பொதுக்கூட்டம் என்ற பெயரில் மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது.

நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி திமுக
மக்களோடு மக்களாக நம்மை இணைப்பது இதுபோன்ற பொதுக்கூட்டங்கள்தான். திமுகவின் வரலாற்றில் இதுபோன்ற மாநாடுகள் முக்கிய பங்காற்றி உள்ளன. மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் திமுக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி

உடன்பிறப்பு என்ற பாசப்பிணைப்பு
ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் என இதுவரை இல்லாத வெற்றியை பெற்றுள்ளோம். கடந்த 55 ஆண்டுகளில் 6 முறை ஆட்சிப் பொறுப்பில் திமுக அமர்ந்து இருக்கிறது. நாம் மக்களோடு மக்களாக இருப்பதாலேயே மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். உடன்பிறப்பு என்ற பாசப்பிணைப்புடன் உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கட்சியினர் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

தலைநிமிர வைத்துள்ளோம்
கடந்த 10 ஆண்டுகளில் பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை நாம் தலைநிமிர வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவிலேயே முன்மாதிரியான நிலை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட்டில் நாம் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்போது தமிழ்நாடு நாட்டின் தலைசிறந்த மாநிலமாக மாறும். தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்ற போராடி வருகிறோம்.

திராவிட மாடல் என்றால் இதுதான்...
133 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலமாக 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கல்வியில் முன்னேறிய தமிழ்நாட்டை மாற்ற நான் முதல்வன் என்ற பெயரில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேட்பவர்கள் இவற்றையெல்லாம் பார்த்து தெரிந்துகொள்ளட்டும்.

அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி
இந்தியை மட்டுமே பேச வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் தானா? என்ற கேள்வியை இன்று அனைவரும் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். பாலியல் குற்றங்களை தடுக்க இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.வேண்டுமென்றே குறை சொல்பவர்கள் குறித்து நான் கவலைப்படவே போவது கிடையாது.












Click it and Unblock the Notifications