ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை பிரிவினை பார்க்கிறதா காவல்துறை? எச்சரித்த முதல்வர்
சென்னை : மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற 3 நாள் மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என பிரிவினை செய்வதும் தவறானது எனவும், ரவுடிகளை இடம், சாதி, மதம் என அடையாளப்படுத்தக் கூடாது எனவும் முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன் தினம் கூடியது.
மூன்றாவது நாளாக சென்னை தலைமைச் செயலகத்தில் மாநாடு நடைபெற்ற நிலையில் நண்பகல் ஒரு மணியுடன் மாநாடு நிறைவடைந்தது.

முதல்வர் ஸ்டாலின்
முன்னதாக மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என பிரிவினை செய்வதும் தவறானது; ரவுடிகளை இடம், சாதி, மதம் என அடையாளப்படுத்தக் கூடாது. குடிசைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அமைச்சர் சொன்னார், இது போன்ற அடையாளப்படுத்தல்கள் கூடாது, சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம்
ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், மீண்டும் சொல்கிறேன் அவர்களை சாதி, மதம், அரசியல் என அடையாளபடுத்தக்கூடாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். குற்றங்களே இல்லாத சமூகத்தை உருவாக்குவதோடு, திட்டமிட்டு உருவாக்கப்படும் மத மோதல்களை தடுக்க வேண்டும். குற்றங்களின் விழுக்காட்டை குறைப்பதற்கு பதில் குற்றமே நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

கடும் நடவடிக்கை
சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்களை ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக மோதல்களை தடுக்க பல்வேறு அமைப்பினருடன் இணைந்து காவல்துறையினர் செயல்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும் பெற்றுத்தரும் துறையாக இல்லாமல், குற்றமே நடக்காமல் காவல்துறை தடுக்க வேண்டும்

உடந்தையாக இருக்கக் கூடாது
தொழில்போட்டியால் உருவாகும் ரவுடிகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கக் கூடாது. போக்சோ வழக்குகளில் விரைந்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறு செய்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது" முதல்வர் ஸ்டாலின் பேசினார். மாநாடு நிறைவடைந்த பின்னர் மாநாட்டில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய உணவு சாப்பிட்டார்.












Click it and Unblock the Notifications