அசத்தல்..மகளிர் தினம்..முதல்வர் ஸ்டாலின் தந்த முக்கிய அறிவிப்பு..இனி குடும்ப தலைவிகள் பெயரில் வீடு.!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக மகளிர் அணியின் இணையதளத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி குடும்பத் தலைவிகளின் பெயரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Recommended Video

    அசத்தல்..மகளிர் தினம்..முதல்வர் ஸ்டாலின் தந்த முக்கிய அறிவிப்பு..இனி குடும்ப தலைவிகள் பெயரில் வீடு.!

    சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 8ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வழக்கான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திமுக மகளிரணி இணையதள தொடக்கவிழா திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

     திமுக மகளிரணி

    திமுக மகளிரணி

    திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக மகளிர் அணியின் இணையத்தளத்தை தொடங்கி வைத்தார். சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

    சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

    திமுக மகளிரணி இணைய தளத்தை தொடங்கி வைத்தபின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், " நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். பேச்சைக் குறைத்து செயலில் நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும். அது கட்சிப் பணியாக இருந்தாலும், ஆட்சிப் பணியாக இருந்தாலும் அந்தப் பணியை நான் அப்படித்தான் நிறைவேற்றுவேன் என்ற அந்த உணர்வோடுதான் என்னுடைய கடமையை நான் ஆற்றிக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் மகிழ்ச்சியாக - உற்சாகமாக - உத்வேகமாக இங்கு அமர்ந்திருக்கும் இந்தக் காட்சியை பார்க்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், மகளிர் தினம் கொண்டாடுகிற அந்த நிகழ்ச்சி ஒரு பக்கம். அதேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று - இமாலய சாதனை வெற்றியைப் பெற்று, அதிலும் இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்றால், அதில் மகளிர் அணிக்கு 50 சதவீதத்திற்கு மேல் இடம்பெற்று, அந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். '

    மகிழ்ச்சி தெரிகிறது

    மகிழ்ச்சி தெரிகிறது

    அந்த மகிழ்ச்சி உங்கள் முகத்தில் தெரிகிறது. எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதனால் முதலில் நம்முடைய சகோதரிகள், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்றிருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை, பாராட்டுகளை தெரிவித்து, உங்களை அந்த இடத்திற்கு வெற்றிபெற வைத்திருக்கும் அந்த சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் ஒன்றை வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், மார்ச் 8 தான் மகளிர் தினம். ஆனால் நமக்கு 4-ஆம் தேதியே வந்து விட்டது. அது என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும். உள்ளாட்சி அமைப்புகளில் நம்முடைய மகளிர், பெண்கள், சகோதரிகள், தாய்மார்கள் பெரும் வெற்றியைப் பெற்று 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை நாம் வகுத்து வைத்திருந்தாலும் அதையும் தாண்டி 50 சதவீதத்திற்கு மேல் கிட்டத்தட்ட 60 சதவீத பெண்கள், தாய்மார்கள் இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கும் அந்தக் காட்சி 4-ஆம் தேதி நடந்த காரணத்தால் நமக்கு 4-ஆம் தேதியே மகளிர் தினம் வந்துவிட்டது.

    திமுக மகளிர் அணி

    திமுக மகளிர் அணி

    அப்படிப்பட்ட நிலையில் ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினத்தை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், மகளிர் அணியின் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் நம்முடைய தங்கை கனிமொழி அவர்கள் உங்கள் அன்போடு, ஆதரவோடு இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து தலைமை தாங்கி நடத்தித் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இதில் பங்கேற்க வைத்திருக்கிறார்கள். அதற்காக முதலில் அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    மகளிர் சுய உதவி குழு

    மகளிர் சுய உதவி குழு

    பெண்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை பொறுத்தவரையில், ஏற்கனவே நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது - துணை முதலமைச்சராக இருந்தபோது, மகளிர் சுய உதவிக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, அந்த நிகழ்ச்சியை நடத்துகிறபோது நான் அடிக்கடி சொன்னதுண்டு. ஏன் அதற்குப் பிறகு, கிராம சபைக் கூட்டம் என்ற அந்த அடிப்படையில் உள்ளாட்சி அமைப்பில் இருக்கும், ஊரகப் பகுதிகளில் - உள்ளாட்சிப் பகுதிகளில் - பஞ்சாயத்துப் பகுதிகளில் கிராம சபைக் கூட்டத்தை கூட்டி, அதில் அதிகமான அளவில் பெண்கள் வந்து அமர்ந்த அந்தக் கூட்டத்தை தொடர்ந்து நாம் நடத்தியது உண்டு. அது எல்லாம் உங்களுக்கு தெரியும்.

    எதார்த்தம் அது!

    எதார்த்தம் அது!

    அப்போது அந்த நிகழ்ச்சிகளில் சொன்னேன், இங்கு ஆயிரக்கணக்கான பெண்கள், இங்கு இடமில்லாமல் பக்கத்து அரங்கத்தில், வெளியில் எல்லாம் பெண்கள், மகளிர் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கூட்டம் அமைதியாக, கட்டுப்பாடாக நீங்கள் இருக்கும் இந்தக் காட்சியை பார்க்கும்போது, இதிலேயே நமக்கு ஒரு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. ஏனென்றால் நான்கு பெண்கள் இருந்தால் எவ்வாறு சத்தம் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். மார்க்கெட்டில், ரேஷன் கடைகளில், தண்ணீர் பிடிக்கும் குழாயடியில் சலசலவென்று ஒரு சத்தம் இருக்கும். நான் தவறாகச் சொல்லவில்லை. எதார்த்தம் அது.

    திராவிட மாடல்

    திராவிட மாடல்

    ஆனால் ஆயிரக்கணக்கில் கூடி இருக்கும் உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு! கரவொலி சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் என்னுடைய காதுக்கு வரவில்லை. எனவே இதுதான் உங்களுடைய வெற்றி. அந்த வெற்றிதான் இந்த இயக்கத்திற்கு வந்து சேரும் வெற்றி. இதுதான் 'திராவிட மாடல்'-உடைய வெற்றி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த மேடைக்கு வந்தவுடன், நான் என்னுடைய செயலாளரை அழைத்து ஒரு சந்தேகத்தை கேட்டேன். உள்ளாட்சியில் எந்தெந்த பதவிகளில் மகளிர் பொறுப்பில் இருக்கிறார்கள். ஒரு பட்டியல் இருக்கிறதா? குறிப்பு இருக்கிறதா? என்று கேட்டேன். அவர் உடனே அவசரப்பட்டு விசாரித்து ஒரு குறிப்பு எடுத்து வந்து என் கையில் கொடுத்தார். அதைப் பார்த்தவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

    மேயர் பதவிகள்

    மேயர் பதவிகள்

    நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேயர் என்பது 21 தான். 21 மாநகராட்சிகள் இருக்கிறது. கூட்டணிக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுத்து விட்டோம். அது கும்பகோணம் மாநகராட்சி. மீதமிருக்கும் 20 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக மேயர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாம் நியாயமாக இருந்தால் 50 சதவீதம் மேயருக்கு கொடுக்க வேண்டும். ஆனால் நாம் அந்த 20 பேரில் 11 பெண்கள் மேயர்களாக இன்றைக்கு அமர்ந்திருக்கிறார்கள். துணை மேயர் பொறுப்புகளுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு கிடையாது. இட ஒதுக்கீடு இல்லை என்று சொன்னாலும் 6 பேர் துணைமேயர் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

    அதிக வெற்றி

    அதிக வெற்றி

    நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளில் மொத்தமாக 649 இருக்கிறது. அதில் 350 இடங்களில் மகளிர் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது பெரிய சிறப்பு. இதுதான் 'திராவிட மாடல்'. 50 விழுக்காடு இடங்கள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டு இருந்தாலும் அதை விடவும் அதிகமான இடங்களில் பெண்கள் வெற்றி பெற்று வந்து இருக்கிறார்கள். இது தந்தை பெரியார் கண்ட கனவு - அறிஞர் அண்ணா நினைத்த உணர்வு - கலைஞர் நமக்கு சுட்டிக் காட்டியிருக்கும் அந்த நிலையைத்தான் நாம் சாதித்து காட்டியிருக்கிறோம். நமது சகோதரிகளின் வெற்றி அதைத்தான் இன்றைய நாள் இந்த மகளிர் தினத்தை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதிகாரம் பொருந்திய இடங்களில் பெண்கள் அதிகமாக வெற்றியைப் பெற தயாராகிவிட்ட காலகட்டத்தில் இந்த விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    மார்ச்8 - மார்ச் 4

    மார்ச்8 - மார்ச் 4

    மார்ச் 8 என்பது மகளிருக்கு மட்டுமல்ல, மனிதகுலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள்!. வேலை நேரத்தைக் குறைக்கவும் - கூலியை அதிகரிக்கவும் - வாக்களிக்கும் உரிமை வேண்டியும் - 1908-ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் வீதிகளில் மகளிர் சமுதாயம் அணி திரண்ட நாள்தான் இந்த மார்ச் 8! இதன் தொடர்ச்சியாகத்தான் சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தின் கோரிக்கைகளுக்கு அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் ஒவ்வொன்றும் செவி மடுக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக அன்றைய சென்னை மாகாணத்தில் 1920-ஆம் ஆண்டே பெண்களுக்கு வாக்குரிமை உண்டு என்ற உரிமையை வழங்கிய ஆட்சி திராவிட இயக்கங்களின் தலைமகனான நீதிக்கட்சி ஆட்சி!

    முதல் கையெழுத்து

    முதல் கையெழுத்து

    ஆட்சிக்கு வந்ததும் எனது முதல் கையெழுத்து என்பது மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதுதான். இதனைச் சலுகையாக நான் சொல்லவில்லை. மகளிரின் உரிமை என்றுதான் சொல்கிறேன். அதுவரை 40 விழுக்காடாக இருந்த பெண் பயணிகள், இப்போது 61 விழுக்காடாக ஆகிவிட்டார்கள். இதன் மூலமாக, பெண்களுக்கான அன்றாடச் செலவு ஏராளமாக குறைந்துவிட்டது. வேலைக்குச் செல்லும் பெண்கள் - காய்கறி - பூ - மீன் எனச் சிறு வியாபாரங்களுக்குச் செல்லும் தாய்மார்கள் - கல்லூரிகளுக்குச் செல்லும் சகோதரிகள் - ஏன், உற்றார் உறவினர்களைச் சந்திக்க செல்லும் பெண்கள் எல்லாம் - இந்தத் திட்டத்தால் இன்று பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தால் நாளொன்றுக்கும் 35 லட்சம் சகோதரிகள் பயணம் செய்கிறார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் இழப்பு என்பது இழப்பு இல்லை! பெண்கள் முன்னேற்றத்திற்கான இன்னொரு படி! இந்தப் பயணத்தின்போது என்னுடைய சகோதரிகளின் முகத்தில் ஏற்படுகிற மலர்ச்சியை பார்க்கும்போது, அதைவிட மகிழ்ச்சியை கொடுக்கின்ற வேறு எதுவும் இல்லை என்று எனக்குத் தோன்றும்! இலவச மின்சாரம் பெற்ற உழவர்களின் மகிழ்ச்சிக்கு இணையானது என் சகோதரிகளின் மகிழ்ச்சி!

    ஏழையின் சிரிப்பு

    ஏழையின் சிரிப்பு


    'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்று பேரறிஞர் அண்ணா சொன்னார், தன் வாழ்நாளெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவே சிந்தித்தாரே முத்தமிழறிஞர் கலைஞர் - அவர்களையும் மனதில் நினைத்து, என் சகோதரிகளின் மகிழ்ச்சியை என்னுடைய மகிழ்ச்சியாக நான் கருதுகிறேன். வீட்டை விட்டு வெளியில் வந்து, சமூகத்தில் திறம்பட உழைத்துச் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையை இந்தத் திட்டம் விதைத்திருக்கிறது, அதுதான் மகளிர் சுயஉதவிக் குழு.
    முதன் முதலில் மகளிர் சுய உதவிக்குழு என்பது 1989-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் அதைத் தொடங்கி வைத்தார். அதற்குப் பிறகு அது படிப்படியாக வளர்ந்து, நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் - துணை முதலமைச்சராகத் தொடர்ந்து பொறுப்பேற்றிருந்த நேரத்தில் அதை எந்த அளவிற்கு வளர்த்தோம் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

    தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்

    தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்

    நான் பல கூட்டங்களில் சொன்னதுண்டு. அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் - யாருடைய தயவையும் அவர்கள் எதிர்பார்க்கக்கூடாது - அவர்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் - அவர்களுக்குரிய சிறு சிறு தொழில்களை வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் கடன் பெற்று அதன் மூலமாக அவர்கள் கம்பீரமாக நிற்க வேண்டும் - எதைப் பற்றியும் அவர்கள் கவலைப்பட கூடாது என்பதற்காகத்தான் அந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அது இன்றைக்கு கம்பீரமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    தொழில் வளர்ச்சி

    தொழில் வளர்ச்சி

    இன்று திராவிட முன்னேற்றக் கழக அரசு உருவாக்கி வருகிற சமூக, அரசியல், பொருளாதார, கல்வி, தொழில் வளர்ச்சி என்பது, தந்தை பெரியார் பேசிய சமூக சீர்திருத்தத்தின் அடுத்த பரிமாணம்! இதைத்தான் 'திராவிட மாடல்' என்று சொல்கிறோம். இந்த அரங்கில் இருக்கிற மகளிர் மட்டுமல்ல, தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து மகளிரும் மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மகளிர் சகோதரிகள் முன்மாதிரியாக கொள்ள வேண்டிய மரியாதைக்குரிய ஷைலஜா டீச்சர் அவர்கள் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள்.

    மகளிரணி நிகழ்ச்சி

    மகளிரணி நிகழ்ச்சி

    நான் முதலமைச்சராக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ மகளிரணி நிகழ்ச்சி, மகளிர் தின நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது நான் முதன்முதலாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மகளிர் தின நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். முதலமைச்சராக இருந்தாலும் - எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் - மேயராக இருந்தாலும் - சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், என்ன பொறுப்பில் இருந்தாலும் சரி நான் உங்களில் ஒருவன். உங்களுடைய சகோதரன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது முதலமைச்சராக வந்திருக்கிற காரணத்தால் ஏதாவது அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடுவாரா அவ்வாறு நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை. நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் பெயரில் அவருடைய நினைவாக 'தந்தை பெரியார் நினைவு - சமத்துவபுரம்' என்ற ஒரு அருமையான திட்டத்தை, எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து - ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக அந்தத் திட்டத்தை உருவாக்கி, அவருடைய ஆட்சிக்காலத்தில் எல்லா மாவட்டங்களிலும் அந்த சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட நேரத்தில் பெண்கள் பெயரில்தான் அந்த வீடுகள் வழங்கப்பட்டது.

    பெண்கள் பெயரில் வீடு

    பெண்கள் பெயரில் வீடு

    அதை மனதில் வைத்துக்கொண்டு இப்போது நான் ஒரு அறிவிப்பை வெளியிடப்போகிறேன். இன்று நான் உங்களுக்காக அறிவிக்க இருப்பது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் 'தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்'என்று மாற்றி விட்டோம். இனி அதில் வழங்கப்படும் வீடுகள் அனைத்தும் குடும்பத் தலைவிகளின் பெயர்களில்தான் வழங்கப்படும் என்பதை இந்த கூட்டத்தில் நான் அறிவித்து, பெண்களைச் சொற்களில் போற்றாமல் - வாழ்க்கையிலும் போற்றுவோம். பெண்ணுரிமை என்பதைத் தாண்டி, பெண்களுக்கான அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்வோம்.

    நாட்டிற்கே முன்னுதாரணம்

    நாட்டிற்கே முன்னுதாரணம்


    இந்த நாளில், உள்ளாட்சிப் பொறுப்புகளில் இடம்பெற்றுள்ள சகோதரிகள் தங்கள் திறனை முழுமையாக வெளிப்படுத்தி, நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்' - என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அத்தகைய திறத்துடன் மகளிர் எழுச்சி பெற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி பங்காற்ற வேண்டும் என்றும் மகளிரணிச் செயலாளர் தங்கை கனிமொழியைக் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகள். நன்றி! வணக்கம்! " இவ்வாறு அவர் உரையாற்றினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+