Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“பாகிஸ்தானில் நம் தமிழ்ச் சொற்கள்” - ‘மாபெரும் தமிழ்க் கனவில்’ ஸ்டாலின் சொன்ன உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவந்த 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சியில் 100வது விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். 'தமிழ் மரபு மற்றும் பண்பாட்டைப் பரப்புவதற்காக இந்நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்டது.

அதற்கான நிறைவு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. அதில், பேசிய முதல்வர் ஸ்டாலின் இன்றைய மாணவர்கள் ஏன் நமது வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்? அதற்கான தேவை என்ன? நமது முன்னோடிகளின் முக்கியத்துவம் என்ன? என்பது பற்றி எல்லாம் மிக விரிவாகப் பேசினார்.

 Chief Minister Stalin said that students should study Tamil history

அந்த வாய்ப்பு எனக்கு பெருமிதம்: விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சில நாள்களுக்கு முன்பு இதே அரங்கத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய 'ஒரு பண்பாட்டின் பயணம்' நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினேன். அது நூல் அல்ல; அது தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலம்.

அந்தப் புத்தகத்தை வெளியிடக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை இன்றைக்கும் நான் பெருமையாகக் கருதிக் கொண்டிருக்கிறேன்.

சிந்து பண்பாடு என்பது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றால், அங்கு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? இந்தக் கேள்விக்கான விடையைத்தான் பாலகிருஷ்ணன் ஆய்ந்து சொல்கிறார்.

அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி, தமிழ் மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் சங்ககாலத்தைச் சேர்ந்த மக்களின் மூதாதையர்கள்தான் என்பதை நிறுவி இருக்கிறார்.

அந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விழுமியங்களோடு வாழ்ந்த சமூகம் தமிழ்ச் சமூகம். இன்றைக்கும் நமது பயன்பாட்டில் இருக்கக் கூடிய கொற்கை, வஞ்சி, தொண்டி, ஊர், பட்டி, பள்ளி, காவேரி, பாண்டியன், குமரன், மதுரை, வன்னி ஆகிய சொற்களின் வேர் குஜராத், மராட்டியம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருக்கின்றன என்பதை அவர் தனது ஆய்வுநூலில் நிறுவிக்காட்டி இருக்கிறார்.

 Chief Minister Stalin said that students should study Tamil history

வரலாற்றை ஏன் படிக்க வேண்டும்?

தமிழர்களின் பண்பாட்டுப் பெருமை இது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்க் படிக்கிறேன், நான் மருத்துவம் படிக்கிறேன், நான் ஏன் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. நாம் தமிழினத்தைச் சார்ந்தவர்கள்.

ஆகவே நம்முடைய இனத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மொழியின் சிறப்பை, நமக்காக உழைத்த தலைவர்களை, நம் நாட்டின் வளத்தை நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

ஒருவர் எங்கிருந்து தன் பயணத்தைத் தொடங்கினார் என்பதைத் தெரிந்துவைத்திருந்தால்தான் அவரது பயணத்தின் இலக்கை அடைய முடியும். இல்லை என்றால், அவர் இலக்கை மறந்து வழிதவறி விடுவார். இது ஒரு இனத்தினுடைய பயணம். நம் தமிழினத்தினுடைய பயணம்.

 Chief Minister Stalin said that students should study Tamil history

சமுக சீர்திருந்தம் எப்படி நடந்தது?

நமது வரலாறு என்பது நமது தலைமுறைகளைக் கடந்து நினைவுபடுத்துவது. அதற்காகத்தான் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாபெரும் தமிழ்க் கனவு என்பது வள்ளுவர் வகுத்ததுதான். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அது. அதுவே சமூகநீதி. அதை எல்லா நிலையிலும் சாத்தியப்படுத்துவதற்கு நாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

வள்ளுவர் சொன்ன சமத்துவத்தை நோக்கியே திராவிட இயக்கம் உழைக்கிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்பதே நம் அறநெறி.

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி" என்பதுதான் தமிழரின் அறநெறி.

சங்ககால தமிழர் வாழ்க்கை என்பது அறம் சார்ந்த வாழ்க்கை. இடைக்காலத்தில் உள்ளே புகுந்த சனாதனம் இந்த அறத்தைக் கொன்றது. சமய நம்பிக்கைக்குள் சனாதனம் நுழைந்ததும், உழைப்புக்குள் நிலவுடைமை நுழைந்ததால்தான் தமிழ்ச் சமுதாயத்தில் அது சாதிய ஏற்றத்தாழ்வும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் விதைத்தது.

திருவள்ளுவர், வள்ளலார் தொடங்கி 20 நூற்றாண்டில் தந்தை பெரியார் வரை சமூக சீர்திருத்தத் தலைவர்களின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையினர் அறியவேண்டும். எப்படி இருந்த நாம் இந்தளவுக்கு வளர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கோயிலுக்குள் வர முடியாது. சாலைகளில் நடக்கமுடியாது. படிக்கக் கூடாது. எதிரே வரவே கூடாது என இருந்த தடைகள் எல்லாம் இப்போது இல்லை. இன்றைக்கு அவை இல்லை என்றால், எப்படி இல்லாமல் ஒழிக்கப்பட்டது? அதுதான் சமூக சீர்திருத்தத் தலைவர்களின் வெற்றி.

தோல் சீலைப் போராட்டத்திற்கு இப்போது 200 ஆண்டு விழா. வைக்கம் போராட்டத்திற்கு இது நூற்றாண்டு விழா. இந்த வரலாறுகளைப் படியுங்கள். ஒரு காலத்தில் சமூக வாசல் அடைக்கப்பட்டுக் கிடந்தது, அதனை நீதிக்கட்சி ஆட்சி திறந்துவிட்டது. பள்ளிக்கூடம் மூடி இருந்தது, அதனைக் காமராசர் திறந்துவைத்தார். கல்லூரி வாசல்களை அண்ணாவும் கலைஞரும் திறந்துவிட்டார்கள்" என உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.

 Chief Minister Stalin said that students should study Tamil history

அன்பழகன் சொன்ன அண்ணா கதை: அவருக்கு முன்னதாக இயக்குநர் கரு பழனியப்பன் பேசினார். அவர் தன் உரையில் பேராசிரியரின் நூலில் படித்த நிகழ்வு ஒன்றைச் சுட்டிக்காட்டி மிகச் சுவாரஸ்யமாகப் பேசினார்.

அவர் பேசுகையில், "பேராசிரியர் அன்பழகன் சிறுவனாக இருந்தபோது 1938இல் முதன்முதலாக அண்ணாவின் பேச்சை மயிலாடுதுறையில் கேட்கிறார். அப்போது அவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி ஒருவரால் பேசமுடியுமா? என்ற ஆச்சரியம். அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து அண்ணாவின் பேச்சைச் சிதம்பரத்தில் கேட்கிறார்.

அப்போது அவருக்குள் எப்படியாவது அண்ணாவை தங்களுடைய கல்லூரிக்குப் பேச அழைத்துவர வேண்டும் என்று ஒரு ஆசை உருவாகிறது. கல்லூரி பேராசிரியரிடம் போய் அனுமதி கேட்கிறார். அவர் துணைவேந்தரைக் கேட்கிறார். இவருக்கு ஒரு தயக்கம் வருகிறது. அண்ணா வந்தால் எப்படியும் அரசியல் பேசுவாரே? என்ன செய்வது என்று தயங்குகிறார்.

ஆனால் அன்பழகன் விடவில்லை. அழைத்துவந்தே தீருவேன் என்கிறார். இறுதியாகக் கல்லூரி சம்மதிக்கிறது. உடனே அண்ணாவிடம் போய் தேதி கேட்கிறார். அண்ணா, கல்லூரிக்கு வர மறுக்கிறார். நமது கொள்கைகளைப் பொதுக்கூட்டங்களில் சொல்வோம். கல்லூரிக்குள் வேண்டாம் என்கிறார்.

ஆனால் அன்பழகன் விடாப்பிடியாக வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கிறார். இறுதியாக அண்ணா ஒப்புக் கொள்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கத்தில் கூட்டம். அந்த அரங்கம் பட்டமளிப்பு விழா அன்றுதான் வழக்கமாக நிரம்பி வழியும். ஆனால் அண்ணாவின் பேச்சைக் கேட்க அன்று அரங்கம் நிரம்பி வழிகிறது.

அண்ணா, நம்முடைய பேச்சால் இந்த மாணவர்களுக்கு எந்தவித சிக்கலும் வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு பேச்சைத் தொடங்குகிறார் அண்ணா.

 Chief Minister Stalin said that students should study Tamil history

அன்று ஆடிப்போன துணைவேந்தர்?

அண்ணா சொல்கிறார், 'நதிக்கரை நாகரிகத்தில்தான் மனிதன் மிக வேகமாக வளர்கிறான். நதி எங்கே இருக்கிறதோ அங்கே நாகரிகம் வளர்கிறது. காவிரி, வைகை, பொருநை தொட்டு அப்படியே ஆந்திராவில் பாயும் கிருஷ்ணாவையும் தொட்டு, அங்கிருந்து நைல் நதியைத் தொட்டு, டைகிரீஸ் நதியைத் தொட்டு என உலகத்தில் ஓடும் நதிகளை எல்லாம் தொட்டுப் பேசிவிட்டு, கடைசியில் கங்கை நதிக்கு வந்து ஆரியர்கள் வருவதற்கு முன்பே தமிழர்கள் மொழியால், பண்பாட்டால், இந்தியா முழுமைக்கு நிறைந்து இருந்தார்கள்.

அப்படிப்பட்ட தமிழர்களின் பண்பாட்டைக் கட்டிக் காப்பதில் மாணவர்களாகிய நீங்கள் முழுப்பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று ஒரு மணிநேரம் பேசி முடித்தார் அண்ணா. அரங்கத்தில் கைதட்டு அடங்க 5 நிமிடம்வரை ஆனது.

இதைக் கேட்ட துணைவேந்தர் அடுத்த நாளே பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தச் சொல்கிறார். அன்றைக்கு அண்ணாவுக்கு அரங்கத்தில் அரசியல் பேசக் கூடாது என ஒரு தயக்கம் இருந்தது. அதே தயக்கம்தான் இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கும் இருந்தது. மாணவர்களிடம் அரசியல் பேசிவிடக்கூடாது என அவர் பார்த்துப் பார்த்து இந்த 'மாபெரும் தமிழ்க் கனவு' மேடையை வடிவமைத்திருந்தார்.

ஒரு அரசு நடத்துகின்ற விழா. அந்த 100 விழாக்களிலும் முதல்வரின் படமே இல்லாமல் விழா நடந்து உள்ளது. தமிழக வரலாற்றிலேயே இப்படி நடந்தது இதுதான் முதன்முறை" என்றார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+