கோவில் பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் -அகவிலைப்படி பொங்கல் பரிசு உயர்வு
சென்னை : தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸ் ஆக 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெரிய சிறு கோயில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் முழு நேரப் பணியாளர்கள் பகுதி நேரப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கடந்த 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதே நேரத்தில் பிற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களும் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா என எதிர்பார்த்திருந்தனர்.

திருக்கோவில் பணியாளர்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி 110வது விதியின் கீழ் முதல்வர் சட்டமன்ற பேரவையில் அறிவித்திருந்தார்.

அகவிலைப்படி உயர்வு
அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியில் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு C மற்றும் D பிரிவு பணியாளருக்கு பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. அத்துடன் பொங்கல் பரிசாக ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்க உள்ளதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.1000 வழங்க உள்ளதாகவும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்க உள்ளதாகவும் அரசு ஆணையிட்டுள்ளது.

முதல்வர் உத்தரவு
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயிலில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி திருக்கோயிலில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17% லிருந்து 31% சதவீதமாக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பணியாளர்கள் மகிழ்ச்சி
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14 சதவீத அகவிலைப்படி உயர்வு திருக்கோயிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் உயர்த்தி வழங்கவும் முதல் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில் பணியாளர்களுக்கான கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது. இதனை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க உள்ளதாக தமிழக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications