முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த கருணாநிதி-முதல்வர்களை பல்கலை.வேந்தராக்கிய மகன் ஸ்டாலின்
சென்னை: 1974-ம் ஆண்டு முதல் நாட்டின் மாநிலங்களின் முதல்வர்கள், சுதந்திர தின நாளில் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி; இன்று நாட்டின் மாநிலங்களின் முதல்வர்களே பல்கலைக் கழகங்களில் வேந்தர்களாகும் உரிமையை பெற்றுத் தந்துள்ளார் தற்போதைய முதல்வரும் கருணாநிதியின் மகனுமாகிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
நாடு விடுதலை அடைந்த காலம் முதல், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் மாநிலங்களின் மத்திய அரசின் பிரதிநிதிகளான ஆளுநர்களே கொடியேற்றுவது வழக்கமாக இருந்தது.

தனித் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு மாநில சுயாட்சி முழக்கத்தை முன்வைத்த திமுக, தமிழ்நாட்டில் 1967-ல் ஆட்சிக்கு வந்தது; 1969-ம் ஆண்டே, மாநிலங்களின் முதல்வர்களுக்கு சுதந்திர தின நாளில் கொடியேற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார் கருணாநிதி. மத்திய அரசாங்கத்திடம் இதற்கான உரிமையை போராடி பெற்றுத் தந்தார் கருணாநிதி.
இதனால் 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல், நாட்டின் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் தங்களது மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுகிற உரிமையைப் பெற்றனர். இந்திய விடுதலைக்குப் பிந்தைய வரலாற்றில் மிக முக்கியமான உரிமையாக மாநிலங்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றன.
மறைந்த முதல்வர் கருணாநிதியைப் பின்பற்றி தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் அவரது மகன், முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், தந்தை வழியில் மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அது மாநிலங்களின் பல்கலைக் கழகமாக இருந்தாலும் கூட மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரே தலைமைப் பொறுப்பானவர்- வேந்தர் என்ற நிலைமைதான் இருந்து வந்தது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கை. மாநிலங்களின் பல்கலைக் கழகங்களுக்கு மாநிலங்களின் முதல்வர்கள்தான் வேந்தர்களாக இருக்க வேண்டும் என்பதற்கான தீர்மானங்களை மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா சட்டசபைகள் நிறைவேற்றின. ஆனாலும் வழக்கம் போல இந்த தீர்மானங்கள்- மசோதாக்கள் கிடப்பில்தான் கிடந்தன.
தற்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுநரால் கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள 10 மசோதாக்களில் ஒன்றுதான், மாநிலங்களின் பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கப்பட்டு மாநில முதல்வரே வேந்தராக நியமிக்கப்படுகிறார் என்பதும். இந்த மசோதாவுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் தந்துவிட்டது.
இதன் மூலம் மாநிலங்களில் பல்கலைக் கழகங்களின் வேந்தர்கள் பதவியில் இருந்து ஆளுநர்கள் நீக்கப்பட்டுவிட்டனர்; இனி பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக மாநிலங்களின் முதல்வர்களே பதவி வகிப்பர். மாநில அரசுகளுக்கான மாநிலங்களின் முதல்வர்களுக்கான மிக முக்கியமான அதிகாரம் இது.
ஆம் அன்று தந்தை கருணாநிதி, மாநிலங்களின் முதல்வர்கள் சுதந்திர தின நாளில் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தார்; இன்று கருணாநிதி மகன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மு.க.ஸ்டாலின், மாநிலங்களின் முதல்வர்களே, பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக பதவி வகிக்க முடியும் என்ற அதிகாரத்தைப் பெற்றுத் தந்து சரித்திரம் படைத்துள்ளார்!












Click it and Unblock the Notifications