பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரிகளில் படிக்க காரணம் திராவிடர் இயக்கம்:முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: தமிழகத்தில் இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரிகளில் படிக்க காரணமாக இருந்தது திராவிடர் இயக்கம்தான் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பது தமிழக அரசின் அறிவிப்பு. இதற்காக ரூ698 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு புதுமைப் பெண் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த புதுமைப் பெண் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற இப்புதுமைப் பெண் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரி பள்ளிகளையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம்
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களின் கல்வியில் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு குறித்து பேசியதாவது: கல்வி என்ற நீரோடை ஏழை, பணக்காரன் உயர்ந்தவர்- தாழ்ந்தவர், உயர்ந்த ஜாதி- தாழ்த்தப்பட்ட ஜாதி; கிராமம்- நகரம் என்ற மாறுபாடும் வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 100 ஆண்டுகளுகு முன்னர் உருவானதுதான் நீதிக்கட்சி. திராவிடர் இயக்கத்தின் அடிப்படை கொள்கையே இதுதான்.

தந்தை பெரியார்
உயர்ந்த ஜாதியை சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும்; அதுவும் ஆண்கள் மட்டும் படிக்க முடியும் என்கிற நிலைமை இருந்தது. அத்தகைய காலத்தில் இடஒதுக்கீட்டையும் பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சிதான். அந்த சமூக நீதியை அரசியல் ரீதியாக காப்பாற்றியவர் தந்தை பெரியார். அந்த சமூக நீதியை ஆட்சி ரீதியாக காத்தவர்கள் பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கருணாநிதி.
அவர்களது வழித்தடத்தில் நமது திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது. இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரிகளில் படிப்பதற்கு காரணம் திராவிடர் இயக்கம்தான். திராவிடர் இயக்கத்தின் பெண்ணுரிமைப் போராட்டங்களால் விளைந்த பயன் இது.

செங்கல்பட்டு மாநாடு
1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாகாண மாநாட்டை இந்த நிகழ்ச்சியில் நினைவு கூறுவது மிகவும் முக்கியமானது.
அந்த மாநாட்டில்தான் பெண்களுக்கு சொத்துரிமை, பணி உரிமை, மறுமணம், தங்களுக்கு தாங்களே இணையரை பெண்கள் தேர்வு செய்யலாம் என பல புரட்சிகரமான பெண்ணுரிமைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட மாநாடுதான் அந்த மாநாடு.

பெண்களுக்கு சொத்துரிமை- கருணாநிதி
அதன் நீட்சியாகவே. 1989-ம் ஆண்டு அதாவது சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியவர் கருணாநிதி. ஆண்களும் மட்டுமல்ல பெண்களும் படிக்கலாம். பெண்கள் படித்தே ஆக வேன்டும் என்ற நிலைமை உருவாக்கியது திராவிட இயக்கம். அதன்வழியே திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Click it and Unblock the Notifications
