ராமதாஸ் Vs ஸ்டாலின்! நிரந்தர வேலை இருக்காது.. வேலையில்லாமலும் இருக்காது! தமிழிசை சௌந்தரராஜன் அட்டாக்
சென்னை: அதானி விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கை குறித்த கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது பாமகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யாருக்கு நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை.. வேலையின்றியும் இருக்கப் போவதில்லை என கூறியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை செளந்தரராஜன்.
சென்னை எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முதல்வர் .

அப்போது, அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்து உள்ளாரே, அதற்கு உங்களின் பதில் என்ன என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அளித்த தமிழக முதலமைச்சர், "பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் முதல்வரின் பேச்சு பாமகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், முதல்வரின் பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், யாருக்கு நிரந்தரமாக வேலை இருக்கப்போவதில்லை.. வேலையின்றியும் இருக்கப் போவதும் இல்லை என கூறியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்," மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா..
ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்..அதுவும் பாமக தலைவர் பெரியவர் ராமதாஸ், போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.. மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலை வேலையில்லாமல் இதை சொல்லவில்லை..
தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன்.. 2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும்.. யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை" என கூறியுள்ளார்.
ராமதாஸ் என்ன சொன்னார்? : அதானி விவகாரம் தொடர்பாக அறிக்கை விட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்," கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன?. அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்" என கூறியிருந்தார். இதற்கு தான் எதிர்வினை ஆற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுதான் விவாதத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications