திமுக பெற்ற அசுரத் தனமான வெற்றி..இனிதான் ஆசிட் டெஸ்ட் ஆரம்பம், கவனமாக கையாளுவாரா முதல்வர் ஸ்டாலின்?
சென்னை: வெற்றி, வெற்றி எங்கு பார்த்தாலும் வெற்றி செய்தி திமுக தலைமையை எட்டிக் கொண்டுள்ளது. லேசுபட்ட வெற்றி இல்லை இது. அசுரத்தனமான வெற்றி.
140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 138 இடங்களை கைப்பற்றியுள்ளது திமுக. விழுப்புரம் 1, செங்கல்பட்டு 1 ஆகியவற்றை விட்டால் வேறு எங்கும் அதிமுக வெற்றி பெறவில்லை.
இதேபோல் 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,368 பதவிகளுக்கு முடிவுகள் வெளியாகி, இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 1,007 இடங்களை வென்றுள்ளன.
திமுகவுக்கு மட்டுமல்ல, கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கும் ராஜயோகம்தான். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அதிமுகவை ஓவர் டேக் செய்து போய்க் கொண்டுள்ளன.

எதிரிகளே இல்லை
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய வார்த்தைகள் இப்போது திமுகவுக்கு ரொம்பவே பொருந்திப் போகிறது. உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது சகஜம் என்றபோதிலும், இது விஸ்வரூப வெற்றி என்பதுதான் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.

யானை பலம்
ஜெயலலிதா போன்ற ஒரு தமிழகம் முழுவதும் செல்வாக்கு கொண்ட தலைவர்கள் இப்போது அதிமுகவில் இல்லை. ஆனால் ஸ்டாலின் கருணாநிதி விட்டுச் சென்ற இடத்தை நிரப்பி விட்டார். இது திமுகவுக்கு யானை பலத்தை தந்துள்ளது. யானை பலம் என்று சொல்லும் இதே நேரத்தில்தான், யானையை அடக்கியாளும் பாகன் பங்களிப்பை சொல்ல வேண்டியதும் கட்டாயமாக இருக்கிறது.

அத்துமீறுவது ஆபத்து
தமிழகத்தில் நீண்ட காலமாக பாஜக எதிர்ப்பலை வீசுகிறது, அதிமுகவும் இப்போது பலம் இல்லை.. எனவே நம்மை தவிர யாருமே போட்டியில் இல்லை என்ற உணர்வு திமுக நிர்வாகிகள் பலருக்கும் வந்து விட்டது. இது ஆக்கப்பூர்வமாக இருக்கும் வரை பிரச்சினையில்லை. ஆனால், அத்துமீறி போகும்போது.. அதன் ஆபத்தை சமீப காலமாக மக்கள் பார்த்துள்ளனர்.

எம்.பி.க்கள் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள்
கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் தனது முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளியை கொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இன்னொரு பக்கம் நெல்லை லோக்சபா எம்.பி. ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் ஏதோ வட்டமோ, மாவட்டமோ இல்லை. நாட்டுக்கு தேவையான சட்டத்தை இயற்ற வேண்டிய மிக முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள். அடுத்தடுத்து இரு எம்.பி.க்கள் அதுவும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு சிக்கியிருப்பது திமுக கட்சிக்குதான் கெட்ட பெயரை ஈட்டித் தரும்.

வெற்றி பூரிப்பு
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெற்ற அடுத்தடுத்த வெற்றிகளின் பூரிப்பு இவர்களை வேறு எதையும் யோசிக்க விடுவதில்லை என்பதற்கான சமிக்ஞைகள்தான் இவை என்று சில அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றிருப்பதன் மூலம், அடி மட்டத்திலும் கட்சி அரசியல் கொடி கட்டிப் பறக்க உள்ளது. தேர்தல் நடக்காத பகுதிகளில் இதுவரை அடிமட்டத்தில் கட்சி பஞ்சாயத்துகள் இல்லாமல் இருந்தன. இனி அவை ஆரம்பமாகும் வாய்ப்பு உள்ளன.

முதல்வர் கவனமாக இருக்க வேண்டும்
"எம்.பி.க்களில் சிலரே அத்துமீறி நடந்து கொள்ளும் நிலையில், அடிமட்டத்தில் திமுக நிர்வாகிகள் இனி எப்படி செயல்படுவார்களோ என்ற அச்சம் உள்ளது. இதை இப்போதே தட்டி வைக்க வேண்டியது திமுக தலைமையின் கடமை. அப்படிச் செய்தால்தான், ஸ்டாலின் கட்டி எழுப்பியுள்ள இமேஜுக்கு நல்லது. கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவரை ஜெயலலிதா கடுமையாக சாடி பிரச்சாரம் செய்வார். அடிமட்ட அளவில் கட்சியினர் செய்யும் அடாவடிகள் கருணாநிதிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தின. ஆனால் ஸ்டாலின் ஆரம்பம் முதலே இதுபோன்ற விமர்சனங்களிலிருந்து விலகியிருக்க விரும்பி தடாலடி நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க தொடங்கினார். இப்போது கிடைத்துள்ள இந்த வெற்றியை பயன்படுத்தி, பழைய 'பஞ்சாயத்துகளை' இழுத்துவிட சில அடிமட்ட நிர்வாகிகள் துணியக் கூடும். எனவே ஸ்டாலின் மிகவும் ஜாக்கிரதையாக இதை கண்காணிக்க வேண்டும். வெற்றி பெறுவது எளிது. அதை தக்க வைப்பதுதான் கஷ்டம். நல்ல பெயரை ஈட்ட பல நாட்கள் தேவைப்படும். அதை கெடுக்க ஒரு நாள் போதும். இதை மனதில் வைத்து கடிவாளத்தை கையோடு முதல்வர் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி தொடர் கதையாக மாறும். அல்லது திமுக அடிமட்டத்தில் யாராவது ஒருவர் செய்யும் தவறும், அதிமுகவை ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்திருக்க வைத்துவிடும். கடந்த காலங்கள் இதற்கு வரலாற்று சான்றாக உள்ளன" என்கிறார் ஒரு அரசியல் பார்வையாளர். ம்.. பார்ப்போம்.. அடுத்தடுத்த நாட்களில் முதல்வர் எப்படி சாட்டையை சுழற்றப் போகிறார் என்பதை.












Click it and Unblock the Notifications