எதிர்க்கட்சி தலைவர் கேட்டதற்கு என்ன பதில்? அதை மட்டும் சொல்லுங்கள்.. அமைச்சருக்கு முதல்வர் அட்வைஸ்
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்குமாறு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக ஆளுநர் இருக்கும் போதே முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று ஆளுநர் அரசு கொடுத்த உரையை வாசிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் ஆளுநர் படித்த உரை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அரசு தயாரித்த உரையே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும் என்றும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

ஆளுநர் ஆர் என் ரவி
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில் அன்றைய தினம் சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜனவரி 13 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடத்தப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி மறைந்த முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்குகியது. இதையடுத்து நேற்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் தொடர்ச்சி நடைபெற்றது.

துறைவாரியான கேள்வி
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு துறைவாரியாக அவரது கோரிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து பேசி வந்தார். அப்போது பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி சேலை வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் காந்தி
அதற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பதில் அளிக்கையில் அதிமுக ஆட்சியில் எப்போதெல்லாம் வேஷ்டி சேலைகள் வழங்கப்படவில்லை என்கிற பட்டியலைத் தொடர்ந்து படித்து வந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு எதிர்க்கட்சித் தலைவர் விலையில்லா வேஷ்டி சேலை எப்போது வழங்கப்படும் என கேட்கிறார்.

வேஷ்டி சேலை எப்போது
அதற்கு என்ன பதில், அதை மட்டும் சொல்லுங்கள் என கூறினார். இதையடுத்து அமைச்சர் காந்தி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி மாதத்துக்குள் விலையில்லா வேஷ்டி சேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக திமுக சட்டசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என்றும் நேரடியாக விஷயத்திற்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications