எழுத்தாளர் இமையத்துக்கு குவெம்பு தேசிய விருது.. புகழ்மாலைகள் குவியட்டும்..முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும் ஆசிரியருமான இமையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், சிறுகதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். தனது முதல் நாவலான 'கோவேறு கழுதைகள்' மூலம் தமிழ் இலக்கிய தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார்.

இமையத்தின் செடல், செல்லாத பணம், சாவு சோறு, பெத்தவன் உள்ளிட்ட படைப்புகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆங்கிலம் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
செல்லாத பணம் என்ற நாவலுக்காக 2020-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது இமையத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் கன்னட தேசிய கவி குவெம்பு பெயரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் 'குவெம்பு தேசிய விருது' இந்த ஆண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த கவிஞர் குவெம்பு நினைவாக ஆண்டுதோறும் கன்னட தேசிய கவி குவேம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கன்னட தேசிய குவெம்பு விருது எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து அவருக்கு விருதுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் இமையம். அவரின் பெரும்பாலான எழுத்துக்கள் பெண்ணியத்திற்கான காணிக்கையாகக் கருதலாம் என விருதுக்குழுவினர் எழுத்தாளர் இமையத்தை பாராட்டியுள்ளனர்.
குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் இமையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். புகழ்மாலைகள் குவியட்டும் என தெரிவித்த உள்ளார்.












Click it and Unblock the Notifications