பதவியை காப்பாற்றிக் கொள்ள நீட்டை கொண்டு வந்தார்கள்.. அதிமுகவை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக நீட் தேர்வை அதிமுகவின் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் நுழைய விட்டார்கள் என சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு கேரளா செல்லவுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் மாலை 6 மணிக்கு அவரது சொந்த தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
திருவிகா நகர் மண்டலத்தில் ரூ 3கோடி மதிப்பிலான பூப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் தானியங்கி நீர் இரைப்பான் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பெரியார் நகர்
இதையடுத்து பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனையில் 75 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு மையத்தை திறந்துவைத்தார். இதையடுத்து லூர்து மேல்நிலைப் பள்ளியில் உள்ள அனிதா அகாதெமியில் பயிற்சி பெற்ற 223 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்.

கொளத்தூர் தொகுதி
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் என்னதான் நான் இன்றைக்கு தமிழகத்திற்கு முதல்வராக இருந்தாலும் கொளத்தூர் தொகுதி என வரும் போது எனக்கு ஒருவிதமான உணர்வு, ஒரு பாசம், ஒரு அன்பு தானாகவே வந்துவிடுகிறது. ஆகவே தமிழகம் முழுவதும் சுற்றி வரக் கூடிய வாய்ப்பை பெற்றிருந்தாலும் என்னை தேர்ந்தெடுத்து இந்த தொகுதியிலிருந்து தொடர்ந்து பணியாற்ற உத்தரவிட்டிருக்கும் மக்களை பார்க்க போகிறோம் என்ற ஆவல் எனக்கு அதிகமாக இருக்கிறது.

அனிதா அச்சீவர்ஸ் அகாதெமி
அனிதா அச்சீவர்ஸ் அகாதெமி என்பது எப்படி உருவாக்கப்பட்டது. ஏன் தொடங்கப்பட்டது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும் என நான் நம்புகிறேன். இருந்தாலும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். நீட் என்ற ஒரு கொடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தி அதிலே படித்து வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தது.

நீட் தமிழகம்
கருணாநிதி முதல்வராக இருந்த வரை நீட் தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. இன்னும் சொல்ல போனால் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த வரையில் அந்த நீட் தமிழகத்திற்கு நுழையவிடவில்லை. ஆனால் அவருடைய மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியில் பொறுப்பேற்றவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

ஆபத்து
தங்களுடைய பதவிகளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நீட்டை தமிழகத்திற்குள் நுழையவிட்டார்கள். அதனால்தான் ஏழை குடும்பத்தில் பிறந்திருக்கக் கூடிய நம் மாணவர்கள் அதிகமாக மதிப்பெண்ணை பெற்று தேர்வில் வெற்றி பெற்ற போதிலும் நீட்டில் வெற்றி பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடக் கூடிய நிலை ஏற்பட்டது.

அரியலூர் அனிதா
அரியலூர் அனிதா நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்த போதிலும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா என சந்தேகம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய நினைவாகத்தான் கொளத்தூர் தொகுதியிலே அனிதா அச்சீவர்ஸ் அகாதெமி என தொடங்கி மாணவர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நான் முதல்வன் திட்டம்
நான் முதல்வன் என்பது மட்டுமல்லாமல் இங்கே இருக்கக் கூடிய அனைவரும் முதல்வனாக வர வேண்டும். ஆட்சியில் மட்டுமல்ல, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் எல்லாத் துறைகளிலும் முதல்வனாக வர வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வன் என பெயர் சூட்டியுள்ளேன். இந்த திட்டத்தை தொடங்குவதற்கு மூல காரணமே அனிதா அச்சீவர்ஸ் அகாதெமிதான் என்றார்.












Click it and Unblock the Notifications