ஆர்டர் போட்ட விஜய்.. நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய 1,800 பேர் மீதான 65 வழக்குகள் வாபஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 1800க்கும் மேற்பட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் மாணவர்கள், மாணவர்கள் அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 1,800 பேருக்கும் மேற்பட்டோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பல்வேறு வழக்குகள் தற்போது வரை நிலுவையில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதன் அடிப்படையில் முதல்வர் விஜய் கொடுத்த அறிவுறுத்தலின்படி நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 1,800 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உரிய சட்டப் பொது நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் 31.07.2026 வரை நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு இவ்வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து கவனமுடன் பரிசீலனை செய்து, நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
