கோவை இளம் பெண்ணுக்கு நிகழ்ந்தது மனிதத்தன்மையற்றது! கண்டிக்க கடுஞ்சொல் போதாது- ஸ்டாலின் கண்டனம்
சென்னை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மனிதத்தன்மையற்றது என்றும் இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்த கடுஞ்சொல்லும் போதாது என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கோவையில் ஒரு கல்லூரியில் தங்கி படித்து வந்தார். அவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்லூரிக்கு விடுமுறையால், தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றாராம்.
இவர்களது கார் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு (நவம்பர் 2) 11 மணி அளவில் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது அவ்வழியாக போதையில் வந்த 3 ஆசாமிகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நின்றிருப்பதை கண்டு அருகே சென்றனர். அங்கு கல்லூரி மாணவியும் ஒரு ஆணும் இருப்பதை கண்டு, அவர்களை வெளியே வருமாறு மிரட்டினராம்.
ஆனால் அவர்கள் போதையில் இருப்பதை அறிந்த இருவரும், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்று காரை எடுத்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து காரை தடுத்து கண்ணாடியை உடைத்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அந்த ஆண் நண்பர் வெளியே வந்ததும் அவரின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் அவர் தலையில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கி விழுந்துவிட்டாராம்.
தனது ஆண் நண்பரை அரிவாளால் அந்த மூவரும் வெட்டியதை அடுத்து அந்த பெண் அஞ்சியுள்ளார். அந்த மூன்று பேரும் அந்த மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அந்த ஆண் நண்பருக்கு நள்ளிரவு 2 மணிக்கு மயக்கம் தெளிந்து பார்த்த போது அந்த மாணவியை காணாது திடுக்கிட்டாராம். உடனே 100-க்கு போன் செய்து போலீஸாரின் உதவியை நாடினார். சம்பவ இடத்திற்கு பீளமேடு போலீஸார் வருகை தந்தனர்.
அவர்களிடம் அந்த ஆண் நண்பர் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே போலீஸார் அந்த பகுதியில் தேடினர். அப்போது புதர் மண்டிய இடத்தில் இருந்து மாணவியை போலீஸார் மீட்டனர். அந்த பெண் நீண்ட நேரமாக ஒரே இடத்திலேயே அச்சத்துடன் இருந்தாராம். இதையடுத்து அந்த பெண்ணை மீட்ட போலீஸார் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு அந்த பெண்ணை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மாணவிக்கு கொடூரம் இழைத்த 3 பேரையும் போலீஸார் நேற்று இரவு சுட்டுப் பிடித்துள்ளனர். அவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications