திமுக கூட்டணி கணக்கு என்னாகும்? தவெக கூட்டணிக்கு தாவும் காங்கிரஸ்? அவரும் வர்றாரா?
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவதற்கான வேலைகளை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்தின் இடையே கூட்டணி ஏற்படலாம் என கூறப்படுகிறது.
சென்னையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக குறைந்த தொகுதிகளை கொடுத்தால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திமுகவை விட்டு விட்டு ஏன் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க கூடாது என மாநில நிர்வாகிகளிடம் கிரிஷ் சோடங்கர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணி தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அந்த கூட்டணி தமிழகத்தில் வெற்றியை குவித்து வருகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இருக்கின்றன.

அதே நேரத்தில் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்க முடியாமல் திணறி வருகிறது. பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயன்று வருகிறார். அதற்காக அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைய வேண்டும் என முடிவெடுத்து அதற்காக செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை தனித்து தான் போட்டி என அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
இதனால் தமிழகத்தில் நான்கு முனை போட்டி அமைவது உறுதியாகியிருக்கிறது. இந்த தேர்தலில் புதிய வரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் களம் இறங்குகிறார். விஜய் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது உறுதி தான் என்றாலும், பிற பகுதிகளில் விஜய் கட்சிக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் இளைஞர்கள், பெண்கள் செல்வாக்கு இருப்பதால் விஜய் நல்ல வாக்கு வங்கியை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க திமுக கூட்டணியில் சில விரிசல்கள் விழ தொடங்கி இருக்கின்றன. கூடுதல் சீட், ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற குரல்கள் கேட்கின்றன. திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளர், துணை முதலமைச்சர் என சித்தரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக திமுக கூட்டணியில் நீண்ட காலமாக பயணித்து வரும் காங்கிரஸ் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 15க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு சென்றனர்.
மக்களவைத் தேர்தலிலும் குறிப்பிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனால் ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே பயன்பெறுகின்றனர். உதாரணத்திற்கு மக்களவைத் தேர்தல் என்றால் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்ட பிரமுகர்கள் மக்களவை சீட்டுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். சட்டமன்ற தேர்தல் என்றாலும் முன்னாள் தலைவர்கள் அவர்களின் ஆதரவாளர்களே பெரும்பாலான சட்டமன்ற தொகுதி சீட்டுகளை பெற்றுக் கொள்கின்றார். இதனால் பல மாவட்டங்களில் இதுவரை ஒரு முறை கூட காங்கிரஸ் போட்டியிடாத நிலை இருக்கிறது.
இதனால் இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் அதிமுக பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் தொகுதிகளை விட்டுத்தர தயாராக இருக்க வேண்டும் என திமுக மறைமுக மெசேஜை அனுப்பி இருக்கிறது. சில தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் எனவும் வற்புறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன.
இந்த நிலையில் தான் சென்னையில் காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் மாவட்ட தலைவர்கள் அல்லாத நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் துணைத் தலைவர்கள், பொருளாளர்கள், கிராம கமிட்டி உறுப்பினர்கள், நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பல மாவட்டங்களில் தலைவர்களின் செயல்பாடுகள் சரியில்லை என மேல் இடத்தில் போட்டுக் கொடுத்திருக்கின்றனர் இரண்டாம் கட்ட நிர்வாகிகள். இது மட்டும் அல்லாமல் திமுக கூட்டணியில் இந்த முறை அதிக சீட்டுகளை கேட்டு பெற வேண்டும் என வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், திமுக வலுவானதே தவிர காங்கிரஸ் ஒருபோதும் வலுவடையவில்லை. மூத்த தலைவர்கள் பலரும் தங்கள் வாரிசுகளை அரசியலுக்கு கொண்டுவந்து அவர்களுக்கு சீட்டுகளைப் பெறவே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக உழைத்தும் தங்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என கொட்டி தீர்த்து இருக்கின்றனர்.
மேலும் மற்ற மாநிலங்களில் இருப்பது போல காங்கிரஸ் தமிழகத்தில் தலைமை ஏற்க போவது எப்போது என கிரிஷ் சோடங்கர் இடம் கேட்டு இருக்கின்றனர். இதனை அவரே எதிர்பார்க்கவில்லை என சொல்லப்படுகிறது. தொடர்ந்து நல்ல முடிவெடுக்கப்படும் எனக் கூறி இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தை முடித்து வைத்திருக்கிறார். தொடர்ந்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில் இன்னும் திமுக கூட்டணியை தாங்கிப் பிடிக்க என்ன காரணம் என வெளிப்படையாகவே கேட்டதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பாதிக்கு பாதி இடங்கள் என கூட்டணி வைத்து ஏன் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இதுவரை விஜய் திமுகவையும் பாஜகவையும் மட்டும்தான் விமர்சித்திருக்கிறார். ஒருமுறை கூட காங்கிரஸ் பற்றி கேள்வி எழுப்பவில்லை. எனவே அவருடன் கூட்டணி வைக்கலாம். விஜய் மீது எந்தவித சாயமும் இல்லாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து ஏன் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கக் கூடாது என நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
இது போன்ற திடீர் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மாநில நிர்வாகிகளே திணறியதாக சொல்லப்படுகிறது. மேலும் இது தொடர்பாக தேசிய தலைமை இடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் கிரிஷ் சோடங்கர் கூறியதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை திமுக சீட்டுகளை குறைத்துக் கொடுத்தால் தவெகவுடன் கூட்டணி என்ற அஸ்திரத்தை பயன்படுத்தி பார்க்கலாம் என திட்டமிட்டுள்ளதாம் காங்கிரஸ்.












Click it and Unblock the Notifications