கிளப்பி விடுறாங்களே.. விஜயிடம் காங்கிரஸ் பேசவே இல்லையாமே.. திமுகவை வளைக்க.. இப்படி ஒரு யுக்தியா!
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான திமுகவிடம் அதிக இடங்களைப் பெற முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி குறித்த தகவல்களைப் பரப்புவது போன்ற வியூகங்களை பயன்படுத்தி, திமுகவிடம் அதிக இடங்களை கேட்கலாம் என்று காங்கிரஸ் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் மற்றும் TVK இடையே கூட்டணி அமையலாம் என சமூக வலைத்தளங்களிலும், சில அரசியல் விமர்சகர்கள் மூலமாகவும் செய்திகள் பரவி வருகின்றன. காங்கிரஸ் - விஜய் பேசி வருகின்றனர்.. விஜய் ராகுல் காந்தியை சந்திக்க போகிறார்.. விரைவில் பேச்சுவார்த்தை நடக்க போகிறது.. என்றெல்லாம் செய்திகள் வருகின்றன,

கடந்த 24 மணி நேரமாக விஜய் - காங்கிரஸ் கட்சி உடன் ஆலோசனை செய்ததாக பல செய்திகள் வந்தன. தவெக கட்சி காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களை கொடுக்க முன் வந்ததாக செய்திகள் வந்தன. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவும் தவெக விஜய் முன்வந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் 70 சீட்-துணை முதல்வர் பதவி என்பது தவெகவின் சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பி விட்ட செய்தி என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் தவெக விஜய் கூட்டணி உண்மையா?
காங்கிரஸ் - தவெக விஜய் கூட்டணி தொடர்பான தகவல்களுக்கு உறுதியான எந்த ஆதாரமும் இல்லை என மூத்த அரசியல் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தங்கள் நிலையை வலுப்படுத்த, ஒரு சில காங்கிரஸ் தலைகள் இந்த உத்திகளைப் பயன்படுத்துகின்றன என்றே கருதப்படுகிறது.
திமுக கூட்டணி வட்டாரங்களின்படி, 2026 தேர்தலில் முந்தைய மாநிலத் தேர்தலை விட அதிக இடங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பேரம் பேச திட்டமிட்டுள்ளது. சில மாவட்டங்களில் தங்கள் அமைப்பு பலம் அதிகரித்துள்ளதாகவும், இதை திமுக அங்கீகரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. காங்கிரஸ் - தமிழக வெற்றிக் கழகம் இடையே ஒரு கூட்டணி பற்றிய உறுதியற்ற செய்திகளை பரப்புவதன் மூலம், திமுகவிடம் அதிக இடங்களை கேட்க முடியும். திமுக கேட்ட இடங்களை கொடுக்க மறுத்தால்.. தவெகவிடம் செல்வோம் என்று திமுகவிற்கு பிரஷர் போட முடியும் .
ஆனால், காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் உடன் கைகோர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவே திமுக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியல் சக்தி, அவர்களுக்கான வாக்கு வங்கி உறுதி செய்யப்படவில்லை, இதனால் காங்கிரஸ் அவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. திமுக உடன் அவர்கள் வைத்து இருப்பது வெற்றி கூட்டணி என்று திமுக தரப்பு கருதுகிறது.
காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் வெவ்வேறு வாக்காளர் தளங்களைக் கொண்டுள்ளதால், திடீர் கூட்டணி சித்தாந்த ரீதியாக வெற்றிபெறாது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸ்
திமுக மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பொதுவாக நீண்ட விவாதங்களை உள்ளடக்கியது. இதில் காங்கிரஸ் பெரும்பாலும் திமுக வழங்கத் தயாராக இருப்பதை விட அதிக இடங்களைக் கோரும். 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், இரு கட்சிகளும் அடுத்த சில மாதங்களில் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், விஜய் வழியாக காங்கிரஸ் போடப்போகும் பிரஷர் திமுக தலைமைக்குத் தெரியும் என்றும், விஜய் மற்றும் காங்கிரஸ் பற்றிய இந்த கூட்டணி கதைகளை தேர்தல் கால உத்தியாகவே திமுக தலைமை பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு, கூட்டணி அப்படியே இருப்பதாகவும், இதில் பிரச்சனை எதுவும் இல்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications