தமிழகத்தில் கொரோனாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை சிறப்பு... முதல்வரை சந்தித்த ஹர்ஷவர்த்தன் பாராட்டு
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனாவிற்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video

கொரோனாவிற்கு உலகம் முழுவதும் 9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறரை கோடி பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் ஒருகோடி பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கோடி பேர் குணமடைந்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது.

இந்தியா முழுவதும் அவசர கால தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தநிலையில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ஒத்திகை நடைபெற்றது.
தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுகளுக்கும் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். பின்னர் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சென்றும் ஹர்ஷவர்தன் பார்வையிட்டார்.
தொடர்ந்து பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் பொது மருத்துவ பொருட்கள் சேமிப்பு கிடங்கையும் சென்று பார்வையிட்டார். தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். முதல்வர் உடனான ஆலோசனைக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கொரோனா பரவ தொடங்கியது முதல் கடந்த ஒரு ஆண்டாக மத்திய அரசு தடுப்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தது என்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொரோனோ நோய்தொற்று முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலங்களும் நோய்த் தடுப்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது. 2020ஆம் ஆண்டு முழுவதுமாக பெருந்தொற்று ஆக்கிரமித்த நிலையில் தற்போது நோய் பரவல், உயிரிழப்புகள் குறைந்துள்ளது.
மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் உலகத்திலேயே இந்தியாவில் மட்டும்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா பிரச்சினை எழுந்தபோது ஒரே ஒரு பரிசோதனை மையத்துடன் துவங்கினோம். ஆனால் தற்போது, நாடு முழுவதும் 2,300 பி.சி.ஆர். நானோ பரிசோதனை மையங்கள் உள்ளன.
இரவு பகலாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்த காலத்தில் கொரோனா தடுப்பூசியை நமது ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.
தடுப்பூசி கண்டுபிடிக்க மட்டுமின்றி அதனை உரிய முறையில் செலுத்தவும் வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோ-வின் செயலியில் பதிவு செய்த சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முதற்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டுமே 100 சதவிகிதம் ஆர்டிபிசிஆர் முறையில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது பாராட்டத்தக்கது. கொரோனா தடுப்பு பணியிலும் சிறந்த பங்களிப்பை வழங்கிய தமிழக அரசின் சுகாதாரத் துறையை வெகுவாக பாராட்டுகிறேன். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
நம்மிடம் தற்போது 2 கொரோனோ தடுப்பூசிகள் அவசரகாலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிக்கு ஒத்திகையும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணி அடுத்த சில நாளில் தொடங்கும்.
வருங்காலங்களில் நகரம் முதல் கிராமங்கள் வரை தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிகப்படியான பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் அடுத்தபடியாக வயது முதிர்ந்தவர்கள், நாள்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் என முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications