கிரெடிட் கார்டு வைத்திருப்போர்களே.. ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் இதை செய்யாவிட்டால் மொத்தமும் காலி
சென்னை: இன்றைய நவீன உலகில் கையில் காசு இல்லாவிட்டாலும், நமக்கு தேவையானவற்றை வாங்க உதவும் ஒரு மேஜிக் பொருளாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது.. அவசர தேவைக்கும், மெடிக்கல் செலவுகளுக்கும் இது ஒரு சூப்பர் வழியென்றாலும், சரியாகக் கையாளத் தெரியாவிட்டால் இதுவே நம்மை மீளாக்கடனில் தள்ளிவிடும் எமனாகவும் மாறிவிடும்.. இதற்கு காரணம், அதனுடைய மறைமுக கட்டணங்கள்தான்.. அவைகளில் இருந்து தப்புவது எப்படி?
கிரெடிட் கார்டு என்பது அடிப்படையில் ஒரு வங்கி நமக்குத் தரும் குறுகிய காலக் கடனாகும்.. இதன் மூலம் பெட்ரோல் போடுவது முதல் மளிகை பொருட்கள் வாங்குவது வரை அனைத்தையும் சுலபமாகச் செய்ய முடியும்.. சரியான நேரத்தில் பணத்தைச் செலுத்தினால் இது ஒரு வரப்பிரசாதம் தான்.. ஆனால் இதன் மறைமுகக் கட்டணங்கள் தான் பாமர மக்களை நிலைகுலையச் செய்கின்றன..

கிரெடிட் கார்டு நன்மைகள்
கிரெடிட் கார்டு வாங்கும் போது பலரும் செய்யும் முதல் தவறு அதன் வருடாந்திரக் கட்டணத்தைப பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளாதது தான்.. பல வங்கிகள் முதல் ஆண்டு இலவசம் என்று கூறி நம்மை வசீகரித்துவிடுகின்றன.. ஆனால் அடுத்த ஆண்டிலிருந்தே பெரிய தொகையை கட்டணமாக அது வசூலித்துவிடும்..
இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் வாழ்நாள் முழுவதும் இலவசம் என்ற வகை கார்டுகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.. அடுத்து மிக முக்கியமானது வட்டி விகிதம்.. நாம் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தத் தவறினால், மாதத்திற்கு 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும்.. இது ஆண்டுக்கு 40 சதவீதத்தைத் தாண்டிவிடும் என்பதால், எப்போதும் முழுத் தொகையையும் செலுத்திவிடுவது அவசியம்..
ஏடிஎம் பணம் வசதி
பலர் கிரெடிட் கார்டில் இருக்கும் ஒரு வசதியை மிகவும் ஆபத்தானது என்று உணருவதில்லை, அதுதான் ஏடிஎம்-மில் பணம் எடுப்பது.. கையில் பணம் இல்லை என்பதற்காக கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்-மில் பணம் எடுத்தால், எடுத்த அடுத்த நொடியே அதற்கான வட்டி மற்றும் பரிவர்த்தனைக் கட்டணம் கணக்கிடப்படும்.. இது உங்கள் வாங்கும் சக்தியை தாண்டி உங்களை சுமையில் தள்ளிவிடும்..
அதேபோல் குறைந்தபட்சத் தொகை என்ற ஆப்ஷனில் சிக்கிவிடக்கூடாது.. குறைந்தபட்சத் தொகையை மட்டும் கட்டினால் வட்டி வராது என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள்.. ஆனால் உண்மை என்னவென்றால், மீதமுள்ள மொத்தத் தொகைக்கும் அதிகப்படியான வட்டி விதிக்கப்படும்.. இது உங்களை முடிவில்லாத கடன் சுழற்சியில் சிக்க வைத்துவிடும்..
வெளிநாடுகளில் பொருட்களை வாங்கும் போதும் அல்லது ஆன்லைனில் டாலர் கணக்கில் பணம் செலுத்தும் போதும் "ஃபாரெக்ஸ் மார்க்கப்" என்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.. இது போக ஒவ்வொரு மாதமும் நாம் செலுத்தும் தாமதக் கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி உண்டு என்பதும் நிறைய பேருக்கு தெரியாது..
கட்டணங்களை தவிர்க்கலாம்
இந்த கட்டணங்களைத் தவிர்க்க வேண்டுமானால், செல்போனில் ரிமைண்டர் வைத்துக்கொண்டு கடைசி தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னாடியே பணத்தை செலுத்திவிட வேண்டும்..
அதேபோல கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட்டை ஒவ்வொரு மாதமும் நுணுக்கமாகக் கவனிப்பதன் மூலம் தேவையில்லாத காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது சந்தாக்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியலாம்.. மொத்தத்தில் சொல்லப்வேபானால் விழிப்புணர்வுடன் இருந்தால் கிரெடிட் கார்டு என்பது சுமையல்ல, அது ஒரு அற்புதமான நிதி மேலாண்மைக் கருவிதான்..!!!












Click it and Unblock the Notifications