என்ன நடக்கிறது? டிஜிபி ஆபரேஷனுக்கு பின்பும் கிரைம்.. நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய 4 பேர் -ரவுடி கொலை
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ரவுடிகளை போலீசார் கைது செய்து ஸ்டார்மிங் ஆபரேஷன் நடத்தி வருகிறார்கள். இதனால் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ரவுடிகளை ஒடுக்குவதற்காக போலீசார் மிகப்பெரிய ஆபரேஷன் ஒன்றை நடத்தி வருகிறார்கள். கடந்த 4 நாட்களாக நடக்கும் இந்த ஆபரேஷனில் 3300க்கும் அதிகமான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திர பாபுவின் நேரடி கண்காணிப்பின் பெயரில் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் அதிகரித்து வந்த நிலையில் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது. இதன் காரணமாக ரவுடியிசம் குறையும், கொலை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் இந்த ஆபரேஷன் தீவிரமாக நடத்தப்பட்டது.

குறையவில்லை
இதனால் தமிழ்நாட்டில் முக்கியமாக சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் கிரைம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த கைது நடவடிக்கைகளுக்கு இடையிலும் குற்றச்செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இன்று சென்னையில் நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தியுடன் சிக்கிய நான்கு நபர்களை போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். முருகேசன், முருகன், கார்த்திக், பிரவீன் குமார் ஆகியோர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர்.

மீட்பு
இவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு 1, பட்டாகத்திகள் 5 கைப்பற்றப்பட்டது. இவர்கள் திட்டமிட்டு இந்த குண்டு மற்றும் கத்திகளை வைத்து இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி பல்லாக்கு மாநகர் அரசு மதுபான கடை முன்பு வைத்து சரவணன் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய எதிரிகள் மணிகண்டன், ஷாம், அஜித், விஜய் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவல் மூலம் சிறைச்சாலையில் உள்ளனர்.

விசாரணை
இவர்கள் வெளியே வர உள்ள நிலையில், அவர்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்படி திட்டமிட்டு இந்த 4 பேரும் கத்திகள், குண்டுகளை ஏற்பாடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்து போன சரவணனின் அப்பா முருகேசன் ,சகோதரர்கள் முருகன், கார்த்திக் நண்பர்கள் பிரவின்குமார் மற்றும் அருண், நவீன் எல்லோரும் சேர்ந்து பிளான் செய்து மணிகண்டன், ஷாம், அஜித், விஜய் ஆகியோரை கொலை செய்ய முயன்று உள்ளனர்.

ஸ்பெஷல் டீம்
போலீசுக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஸ்பெஷல் டீம் நடத்திய சோதனையில் முருகேசன், முருகன், கார்த்திக், பிரவீன் குமார் நான்கு பேரும் தங்கள் வீட்டில் ஆயுதங்களை பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில், செம்மஞ்சேரியை சேர்ந்த கார்த்திக்
என்பவரிடம் இவர்கள் கத்தி வாங்கியதும், கண்ணகி நகரைச் சேர்ந்த சுனாமி என்கிற சுரேஷ் என்ற நபரிடம் இவர்கள் நாட்டு வெடிகுண்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை
இது இப்படி இருக்க இன்னொரு பக்கம், எண்ணூரில் ஆறுமுகம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆறுமுகம் மீது பல வழக்குகள் உள்ள நிலையில் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். எண்ணூர் நேதாஜி நகர் 1 தெருவில் இவர் வசித்து வந்தார். தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் இவர், நேற்று வீட்டில் தூங்கும் போது கொலை செய்யப்பட்டார்.

5 பேர் கும்பல்
5 பேர் கொண்ட கும்பல் சிமெண்ட் சீட்டில் ஆன சுவரை சத்தமின்றி உடைத்து வீட்டினுள் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி உள்ளனர். மாதவரம் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையாளர் வழக்கை விசாரித்து வருகிறார்கள். இவரை கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இதேபோல் சொத்து தகராறு காரணமாக திண்டுக்கல்லில் வெள்ளை என்ற விவசாயி கொலை செய்யப்பட்டார். ஒரு பக்கம் போலீசாரின் ஆபரேஷனுக்கு இடையில் இப்படி கிரைம் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications