சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்!
டெல்லி: சிஎஸ்கே அணியில் தமிழ்நாடு வீரர்களை விளையாடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் போராட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார். சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்குவது தோனி என்று கூறிய டிடிவி தினகரன், இனியும் டெல்லி, தமிழ்நாடு என்று திமுகவால் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறி உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. அதற்காக சிஎஸ்கே, மும்பை உட்பட 10 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த முறை சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க உள்ளார். அதேபோல் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்குள் வந்திருப்பதால், இதுவே தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ஃபீவர் ரசிகர்களை கடந்து அரசியல்வாதிகளையும் பிடித்திருக்கிறது. டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொகுதி பங்கீடு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லி இடையிலான தேர்தல் என்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதற்கேற்ப திமுக vs என்டிஏ என்றும், தமிழ்நாடு vs டெல்லி என்றும் திமுகவினர் போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லி சென்று அமித்ஷாவுடன் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இது தமிழக அரசியலில் விவாதமாகி இருக்கிறது. இந்த நிலையில் அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூ.12 லட்சம் கோடி கொடுத்துள்ளது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி தான் நிதி வழங்கப்பட்டது. தற்போது தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிதியை மக்களுக்கு கொடுத்திருக்கிறது.
இது கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாடுக்கு உடைத்தது போல இருக்கிறது. தமிழக அரசு நிதி ஆளுகையை சரியாக செய்யவில்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்குவது தோனி. அதில் எத்தனை தமிழ்நாடு வீரர்கள் விளையாடுகிறார்கள்? இதற்கு சென்று முதல்வர் ஸ்டாலினை போராட சொல்லுங்கள்.
டெல்லி, தமிழ்நாடு என்று கூறி இனி மக்களை ஏமாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். திடீரென ஏன் டிடிவி தினகரன் சிஎஸ்கே அணி தொடர்பாக பேசினார் என்பதும், அதற்கு ஏன் முதல்வர் ஸ்டாலினை போராட சொல்கிறார் என்பது அங்கிருந்த செய்தியாளர்களுக்கே கொஞ்சம் சர்ப்ரைஸ் தான். டிடிவி தினகரனின் பேட்டி சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications