மாஜி அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் வேலையை காட்டிய சைபர் கிரைம் மோசடி கும்பல்.. நடந்தது என்ன?
சென்னை: மத்திய பிரதேசத்தில் இருந்து போன் செய்து மர்ம கும்பல் ஒன்று பணமோசடி செய்ய முயற்சிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவி சரோஜா போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் மத்திய சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன். இவரது மனைவி சரோஜா இன்று சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் ஒரு புகார் ஒன்றை அளித்திருந்தார். சரோஜாவின் வழக்கறிஞர் சார்பில் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் மோசடி கும்பல் ஒன்று தன்னிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

தொலைத் தொடர்பு நிறுவனத்தில் இருந்து ஒருவர் தன்னை தொடர்புகொண்டு பேசியதாகவும், தங்கள் ஆதார் கார்டு மூலம் சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இந்த சிம் கார்டுகள் சில சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக அந்த நபர் சரோஜாவிடம் கூறினார். மேலும், இவ்வாறு அந்த சிம் கார்டை பயன்படுத்தி சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரை நாங்கள் கைது செய்துள்ளோம்.
மத்திய பிரதேசத்தின் இந்தூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நபர் சரோஜாவிடம் கூறியிருக்கிறார். மேலும் தொடர்ந்து இப்படியே இரண்டரை மணி நேரமாக அந்த நபர் சரோஜாவிடம் போனில் பேச்சு கொடுத்துள்ளார். மேலும் அந்த நபர் கூறுகையில், உங்கள் சிம் கார்டை பயன்படுத்தி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு சீனாவின் சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.
கைதான நபரிடம் உள்ள சிம் கார்டில் உங்கள் பெயர் இருப்பதனால், இந்த வழக்கில் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி உங்களையும் கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்படி நடக்காமல் இருக்க நீங்கள் உங்களது ஆதார் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை முதலில் உண்மையென சரோஜா நம்பியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு சிறிது சந்தேகம் வந்ததால், உடனடியாக போனை கட் செய்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக சரோஜா சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது பலரும் இது மோசடி கும்பல் தான் என்றும், இது இந்தியா முழுவதும் இப்படியொரு மோசடி நடந்து வருவதையும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சரோஜா இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி தான் தன் வழக்கறிஞர் மூலமாக புகாரை கொடுத்துள்ளார். இந்த புகாரை பெற்றுள்ள போலீசார், மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற மோசடியானது பல்வேறு இடங்களில் நடந்து வருவது தெரியவந்துள்ளது. எனவே சரோஜாவிடம் பேசிய கும்பல் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications