சென்னையை நெருங்கும் முரசு புயல்.. மணிக்கு 25 கிமீ வேகம்.. இன்றே கொட்ட தொடங்கிய கனமழை.. புது அலர்ட்!
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் 25 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் மழை தொடங்கியுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வரும் நிலையில், புயல் நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே அர்னாப் புயல் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை கொட்டியது. இதற்கிடையே இப்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு முரசு என பெயரிடப்பட்டுள்ளது.

முரசு முயல்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் ஆந்திர பிரதேச கடற்கரையை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் மழை தொடங்கியுள்ளது. சென்னையில் நாளை கனமழைக்காக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை முதலே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கிமீ வேகத்தில் நகர்ந்த முரசு புயல், தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் நெல்லூரில் இருந்து 490 கிமீ, மசூலிப்பட்டினத்தில் இருந்து 500 கிமீ, விசாகப்பட்டினத்தில் இருந்து 560 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த புயல் நாளை நவம்பர் 2ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை வரை நெல்லூர் - நரசாபுரம் இடையே ஆந்திரக் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
120 கிமீ வேகம்
அப்போது புயல் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிமீ வரை இருக்கும் என்றும் இடையிடையே 120 கிமீ வேகத்தில் கூட காற்று வீசலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
முரசு புயல் காரணமாக இன்றிரவு பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், பசுமைவழிச்சாலை, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அண்ணா சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
மழை இருக்கும்
இந்த மழை நாளையும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 1ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 2ஆம் தேதி சென்னை, திருவள்ளூரில் மிக கனமழையும், மற்ற சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யலாம். நவம்பர் 3ஆம் தேதி மழையின் தீவிரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை மாநிலங்கள்
அர்னாப் புயலை போலவே இந்த முரசு புயலும் ஆந்திராவிலேயே மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலை எதிர்கொள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புயல் பாதிப்பு பகுதிகளில் மீட்புக் குழுக்கள், நிவாரண பொருட்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தியுள்ளார். மின்கம்பங்கள் சேதமடைந்தால் அதை சரி செய்து உடனடியாக மின் விநியோகத்தை சீரமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அர்னாப் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு மாநிலமான ஒடிசாவின் தெற்கு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் உஷார் நிலையில் இருக்குமாறு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை எச்சரிக்கை நீடிப்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
