ரூ. 811 கோடி...2 மாநகராட்சிகளில் 47 டெண்டர்கள் - அறப்போர் இயக்கம் அளித்த புகாரால் சிக்கிய நால்வர்
சென்னை மாநகராட்சி, கோவை மாநகராட்சி இரண்டு முக்கிய துறைகளில் தான் அதிகமாக பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் அளித்த புகார் எஸ்பி வேலுமணிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னை: எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியிலும் கோவை மாநகராட்சியிலும் தனக்கு நெருக்கமான 4 பேருக்கு அதிகமான டெண்டர் ஒதுக்கீடு செய்ததாகவும் 47 டெண்டர்கள் ஒரே ஐபி அட்ரஸில் போட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எஸ்.பி வேலுமணியின் வீடு மட்டுமல்லாது அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடு ஆடிட்டர் வீடு என சென்னை, காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல் என மொத்தம் 53 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.

எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது தனது பதவியைப் பயன்படுத்தி உறவினர்கள் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தங்களை அளித்தது தொடர்பான புகார் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து எஸ்.பி வேலுமணியிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பொறுப்பேற்றார். இவரது நிர்வாகத்தின் கீழ் தான் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சி ஆகியவை இருந்தன. எஸ்பி வேலுமணி 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக தர அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். கோவை மாநகராட்சிக்கான அரசு ஒப்பந்தங்களையும் நெருக்கமானவர்களுக்கு தருவதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 464.02 கோடி ரூபாய் அளவிற்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களும், 346.81 கோடி ரூபாய் மதிப்பிலான கோவை மாநகராட்சி ஒப்பந்தங்களும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் 1998இன் கீழ் இது தவறு. 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டெண்டர் ரூல் படியும் தவறு. இந்த விவகாரத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எஸ்.பி.வேலுமணி உடன், பி.அன்பரசன், சந்திர பிரகாஷ், சந்திரசேகர், முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, தி ஏக டெக் மெசினரி காம்பணன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட், கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ப்ரா லிமிடெட், கான்ஸ்ட்ரோமலி குட் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் பவுண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், வைதுர்யா ஹோட்டல்ஸ், ரத்னா லக்ஷமி ஹோட்டல்ஸ் பி லிமிடெட், ஆலம் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ், கு.ராஜன் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 17 பேர் மீது 3க்கும் அதிகமான பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஐபிசி பிரிவு 120-B, சட்ட விரோத செயலை செய்வது, குற்றசதி மேற்கொள்ளவதற்கு எதிரான பிரிவு. ஐபிசி பிரிவு 420 : ஏமாற்றுதல், மோசடிகளுக்கு எதிரான வழக்கு பிரிவு ஐபிசி பிரிவு 40: இது இந்தி தண்டனை சட்டத்தில் குற்றம் என்ற பிரிவின் கீழ் வருவது ஆகும். குற்றம் புரிந்தவர்களுக்கு இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு சாத்தியப்படும். ஊழல் தடுப்பு 1988 சட்ட பிரிவு : 109 IPCன் 13 (2) r/w 13 (i) (c) and 13 (1) (d) பிரிவுகள்: லஞ்ச ஒழிப்புத்துறையின் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான சட்ட பிரிவுகள் ஆகும்.
அறப்போர் இயக்கத்தின் புகார்
கடந்த மார்ச் மாதம் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அந்த வீடியோவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல ஊழல்களை செய்துள்ளார். அதில் ஒரு ஊழலை பார்க்க போகிறோம். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மே 2014ல் அமைச்சரான பிறகு கோவை மாநகராட்சியில் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்து, தன்னுடைய சகோதரர் அன்பரசனின் நிறுவனமான செந்தில் அன்கோவிற்கு எப்படி டெண்டர்களை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
செந்தில் அன்கோ என்னும் நிறுவனம், ராஜன் ரத்தினசாமி என்ற நபரும், அதாவது இந்த 2 பேரும் மட்டுமே பங்கு பெற்று கிட்டத்தட்ட 47 டெண்டர்களில் போட்டி போடுகிறார்கள். இவர்கள் மட்டும் டெண்டர்களை எடுத்து கொள்கிறார்கள். 2014 முதல் 2017 வரை இது நடக்கிறது. இந்த ராஜன் ரத்தினசாமி என்ற நபர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் செந்தில் அன்கோ என்ற நிறுவனத்திலேயே வேலை செய்வதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் 47 டெண்டர்களில் அடுத்தடுத்து டெண்டர் அப்லோடு செய்துள்ளனர். இந்த டெண்டர்களில் சில ரேண்டமான டெண்டர்களை எடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அனுப்பி இது குறித்து கேட்டோம். அதில் அனைத்து டெண்டர்களும் ஒரே ஐபி அட்ரஸில் இருந்து அப்லோடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.
அது மட்டுமல்ல கோயமுத்தூர் மாநகராட்சி ரிஜிஸ்டரில் இருந்த கான்ட்ரக்டர் லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் செந்தில் அன்கோ நிறுவனத்திற்கும், ராஜன் ரத்தினசாமிக்கும் ஒரே தொலைபேசி எண்ணை கொடுத்து இருக்கிறார்கள். அந்த தொலைபேசி எண்ணை ட்ரூ காலரில் பார்க்கும் போது ராஜா எஸ்பிவி என்று வருகிறது. பெயரளவில் இரண்டு பேரை காட்டியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் சிங்கில் டெண்டர்கள்.
டெண்டர்கள் விதிமுறைகளை மீறி கோடிக்கணக்கான ரூபாய் டெண்டர்களை தனது சகோதரருக்கு கொடுப்பதற்காக இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி தன்னுடைய குடும்பத்திற்கே சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்து இருக்கார் என்பது இந்த ஊழலில் இருந்து தெள்ள தெளிவாக தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ரூ.346 கோடி ஊழல் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மாநகராட்சி ஒப்பந்தங்கள் குறித்து எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை கேள்வி கேட்டு வருகிறது.
Recommended Video
எஸ்.பி வேலுமணி வீடு, சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஆடிட்டர் வீடு என பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது அதிமுக வட்டாரர்களில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications