இந்தியாவிலேயே சிறந்த எம்எல்ஏ உதயநிதி தான்! அடித்துகூறிய தயாநிதி மாறன்..தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம்
சென்னை: தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதுணையாக உள்ளார். இந்தியாவிலேயே சிறந்த எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தான்'' என தயாநிதி மாறன் எம்பி பேசிய நிலையில் திமுக தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
இருப்பினும் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்கவில்லை. இந்நிலையில் தான் சமீபகாலமாக திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து மேடைகளில் பேசி வருகின்றனர்.

தயாநிதி மாறன் பேச்சு
இந்நிலையில் தான் நேற்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் திமுக சார்பில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பி தயாநிதி மாறன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம்பி பேசும்போது கூறியதாவது:

சிங்கப்பூர் போல்...
கடந்த 10 ஆண்டுகளாக பலர் ஆட்சியில் இருந்தார். அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் வெறும் 8 மாதத்தில் சென்னையில் மழை பெய்தால் தண்ணீர் நிற்காத நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். பொதுவாக தண்ணீர் தேங்கினால் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்பட்டுவிடும். இதனால் யாரும் தண்ணீரில் போகமாட்டோம். இந்த நிலை தற்போது சென்னையில் மாற்றப்பட்டது. சிங்கப்பூரில் எப்படி மழை பெய்தாலும் மக்கள் பணி செய்வார்களோ? அதேபோன்ற நிலை சென்னையில் உள்ளது.

உதயநிதி தான் சிறந்தவர்
தற்போது ஒன்றரை ஆண்டு மட்டும் தான் முடிவடைந்துள்ளது. இன்னும் மூன்றரை ஆண்டு ஆட்சி இருக்கிறது. இந்த காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்காக பல நல்ல திட்டங்களை வழங்க உள்ளார். அதற்கு உறுதுணையாக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். இந்தியாவிலேய சிறந்த எம்எல்ஏ யார் என்றால் அது உதயநிதி ஸ்டாலின் தான்'' என பேசினார். இதை கேட்ட தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

முன்பு நடந்தது என்ன?
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பும் விழா ஒன்றில் தயாநிதி மாறன் பேசினார். அப்போது தமிழகத்தில் சிறந்த எம்எல்ஏவாக உதயநிதி ஸ்டாலின் உள்ளார் என புகழ்ந்தார். அப்போது தமிழ்நாட்டில் சிறந்த எம்எல்ஏ என உதயநிதி ஸ்டாலினை தயாநிதி மாறன் கூறிய நிலையில் தற்போது இந்தியாவிலேயே சிறந்த எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தான் என கூறியுள்ளார். இதேபோல் ஏற்கனவே மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, தமிழ்நாட்டில் சிறந்த எம்பி என்றால் அது தயாநிதி மாறன் தான் என திருப்பி அவரை புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் உதயநிதிக்கு அங்கீகாரம்
மேலும் நேற்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் நடந்த கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது, ‛‛234 சட்டசபை தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஒரு தலைவர் உண்டு என்றால், ஓர் அணிக்கு செயலாளர் உண்டு என்றால் அது உதயநிதி ஸ்டாலின் தான். இதனை திமுக பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி கூறிக் கொண்டிருக்கிறது. இயக்கப்பணி என்றாலும், மக்கள் பணி என்றாலும் தொடர்ந்து முன்னின்று உதயநிதி ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். வருங்காலங்களில் அவர் தமிழகத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார். அவருக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் விரைவில் வழங்குவார்'' என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications