முதல் நாளே மிகப்பெரிய சாதனை.. உலக மைதானத்தில் சிக்ஸ் அடித்த "இந்தியா".. ஜி 20 மாநாட்டில் 3 அதிரடிகள்
சென்னை: டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் உலக அரசியலை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் ஜி 20 மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதிகாரப்பூர்வ G20 இணையதளத்தின்படி, 18வது G20 உச்சி மாநாட்டின் தீம் "வசுதைவ குடும்பகம்". இது "ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்று மொழிபெயர்க்கப்படும் சமஸ்கிருத சொற்றொடர் ஆகும். பழங்கால சமஸ்கிருத இலக்கியங்களில், குறிப்பாக மகா உபநிடதத்தில் இந்த சொற்றொடர் இருந்தது. மனிதர்கள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட அனைத்து உயிர்களின் மதிப்பையும், பூமி மற்றும் பரந்த பிரபஞ்சத்தில் நாம் எல்லோரும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த கூட்டம் நடக்க உள்ளது.

ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.
இதற்காக சர்வதேச தலைவர்கள் பலர் டெல்லிக்கு வந்து உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்தர பிரதேச விமான நிலையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கே சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் டெல்லியில் மொத்தமாக பாதுகாப்பு மாற்றப்பட்டு உள்ளது. நகரத்திற்கு உள்ளே பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் 3 அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் உலக அரசியலை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவு 1 : டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் ஆப்ரிக்க யூனியன் இணைந்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
நேற்று பிரதமர் மோடி ஆப்ரிக்க யூனியனை இந்த குழுவில் அறிமுகம் செய்து நிரந்தர உறுப்பினராக அறிவித்தார் . உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடுகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட குழு, ஆப்பிரிக்க யூனியனை தங்கள் உறுப்பினர்களில் ஒன்றாக சேர்த்து அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20ல் இணைந்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்து நாடு இல்லாத ஒரு கண்டம் இந்த குழுவில் இணைந்துள்ளது. பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக ஆப்ரிக்காவை இது புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னெடுப்பின் கீழ் ஆப்ரிக்கா இந்த குழுவில் இணைந்துள்ளது. இதன் மூலம் ஆப்ரிக்க நாடுகள் இந்தியாவை பாராட்ட தொடங்கி உள்ளன. இந்தியாவின் மாபெரும் அரசியல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இந்தியா கொண்டாட்டம்: இதன் மூலம் இந்தியாவை ஆப்ரிக்க நாடுகள், ஆப்ரிக்க தலைவர்கள் கொண்டாட தொடங்கி உள்ளன. இந்தியாவின் உதவியை இனி ஆப்ரிக்க நாடுகள் என்று மறக்காது என்று சொல்லும் அளவிற்கு இது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆபிரிக்க ஒன்றியம் ஏழு ஆண்டுகளாக முழு உறுப்பினராக வாதிடுகிறது என்று அதன் செய்தித் தொடர்பாளர் எப்பா கலோண்டோ ஏற்கனவே கூறி இருந்தார். இப்போது வரை, தென்னாப்பிரிக்கா மட்டுமே G20 உறுப்பினராக இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது ஆப்ரிக்காவின் கோரிக்கை நிறைவேறி உள்ளது.
காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, இடம்பெயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக ஆப்ரிக்கா இந்த குழுவில் அதிக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆப்ரிக்க கண்டத்தின் இளம் மக்கள்தொகை 1.3 பில்லியன் ஆகும். இது 2050 இல் இரட்டிப்பாகும். மொத்த பூமியின் மக்களில் நான்கில் ஒரு பங்கைக் ஆப்ரிக்க மக்கள் கொண்டிருப்பர்.

முடிவு 2: அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சி மாநாட்டில் ரயில் மற்றும் துறைமுகங்கள் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு போட்டியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சீனாவின் பெல்ட் மற்றும் ரோடு பார்வையில் மத்திய கிழக்கு ஒரு முக்கிய பகுதியாகும். அமெரிக்க அதிபர் "ஜனாதிபதி பிடன் இந்தியா பிரதமர் மோடி, மற்றும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் இன்று ஒரு பெரிய கூட்டு உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை போடுவார்கள் என்று கூறப்படுகிறது.
வளைகுடா மற்றும் அரபு நாடுகளை ரயில்வே நெட்வொர்க் மூலம் இணைக்கும் விதமாகவும், ஜி 20யில் அருகருகே இருக்கும் நாடுகளை ரயில் மூலம் இணைக்கும் விதமாகவும், மற்ற நாடுகளை கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் விதமாகவும் இந்த ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இந்த நாடுகளை கடல் போக்குவரத்து மூலமும், சாலை போக்குவரத்து மூலமும் போக்குவரத்து பணிகளை மேற்கொள்ளும் விதமாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முடிவு 3: நேற்று நடந்த கூட்டத்தில் டெல்லி கூட்டறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. 20 நாடுகளின் தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. ஒருமித்த முடிவோடு ஜி 20 மாநாட்டில் அறிக்கை வெளியிடுவது கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவிற்கான வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா - ஐரோப்பா பொருளாதார ஒப்பந்தம், காலநிலை மாற்றத்திற்கான அறிக்கை, உக்ரைன் - ரஷ்யா போருக்கு எதிரான அறிக்கை (ரஷ்யாவை இதில் எதிர்க்கவில்லை , பொதுவாக போர் எதிர்க்கப்பட்டு உள்ளது ) என்று பல விஷயங்களை உள்ளடக்கிய கூட்டறிக்கை ஒன்றாக வெளியிடப்பட்டது. இந்த கூட்டறிக்கை மிகப்பெரிய வெற்றியாக இந்தியாவிற்கு பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications