மாணவி மரணம்.. பள்ளியில் என்ன நடந்தது?.. விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
சென்னை: தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் காவல் துறையினர், மாணவியின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவியின் மரணத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று திடீரென பள்ளி முன் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தை சூறையாடியதோடு, பள்ளியில் இருந்த ஏராளமான வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்தப் பகுதியே வன்முறைக் களமாக மாறியது.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த நிலையில், மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications