"இந்த உலகத்தில் தப்பு சரி எதுவும் கிடையாது".. ஆஹா வலிமை பட டயலாக்! ஸ்டேட்டஸாக வைத்த வங்கி கொள்ளையன்?
சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகன் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முதல் நாள் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸாக வலிமை படத்தில் வில்லன் பேசிய டயலாக்கை வைத்திருந்தாரா என்பது குறித்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கிக் கிளையில் நேற்று முன் தினம் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியில் பொதுமக்களிடம் இருந்து அடமானமாக பெறப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து அடமானம் வைத்தவர்கள் வங்கி முன் குவிந்தனர். இது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை.. மாஸ்டர் மைண்ட் ஜிம் முருகன் கைது.. நடந்தது என்ன?

வங்கிக் கிளை
இந்த நிலையில் இந்த வங்கியில் இன்னொரு கிளையின் மேலாளராக பணியாற்றிய முருகன் என்பது தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. முருகன் தனியார் ஜிம்மில் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். முருகனுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில் உடனடியாக பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் முருகனுக்கு இருந்தது தெரியவந்தது.

10 நாட்கள் திட்டம்
இந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இவர்கள் 10 நாட்களாக நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இந்த நிலையில் இந்த கொள்ளையில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 4ஆவதாக முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டார்.

சிசிடிவி காட்சிகள்
வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களுக்கும் ஸ்பிரே அடிக்க முயற்சித்துள்ளது தெரியவந்தது. இவர்கள் இரு இரு சக்கர வாகனத்தில் நகை மூட்டையுடன் பயணித்ததும் தெரியவந்தது. எனினும் கொள்ளையடிப்பதற்கு முன்பு கொள்ளையர்கள் வங்கியை நோட்டமிட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன.

ஸ்டேட்டஸ்
முருகன் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முதல் நாள் இரவு தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வலிமை படத்தில் வில்லன் பேசும் டயலாக்கை முருகனும் ஸ்டேட்டஸாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. "இந்த உலகத்தில் தப்பு சரி என்பது எதுவும் கிடையாது. நாம் செய்யும் வேலையை நியாயப்படுத்த முடியும் என்றால் அது சரி, முடியவில்லை என்றால் அது தவறு" என்பதுதான் அந்த வசனம்.
Recommended Video

போலீஸ் சொல்வது என்ன
அதாவது முருகன் தான் கொள்ளையடிக்க போகும் சம்பவத்தை நியாயப்படுத்தி ஸ்டேட்டஸ் வைத்திருந்ததும் தெரியவந்தது. ஆனால் இந்த தகவலை போலீஸார் மறுத்துள்ளார். முக்கிய குற்றவாளி முருகன் கைது செய்யப்பட்டதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், வலிமை படத்தின் டயலாக்கை முருகன் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை என்றார்.