தேமுதிக வந்தாலும் தலைவலி தான்.. 2026ல் திமுகவுக்கு பெரிய ட்விஸ்ட்! விடாதே விசிக.. ரெடியான ஸ்டாலின்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியை இறுதி செய்யும் முடிவில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். தேமுதிக கூட்டணிக்கு வந்திருப்பதால் விசிக, மதிமுக கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைய வாய்ப்பு இருப்பதால் திமுக தலைமை அந்த கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகின்றன. இந்த முறை நான்கு கட்சிகள் இடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் அறிக்கை தயார் செய்தல் போன்ற பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே திமுக, கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிப்பை தொடங்கியுள்ளது.

திமுக கூட்டணி 2026
வழக்கம்போல இந்த தேர்தலிலும் மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் திமுக தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. மேலும் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களும் உடன் இருக்கின்றனர். மேலும் கூடுதலாக இதுவரை திமுக கூட்டணியில் சேராத பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக இணையலாம் என சொல்லப்படுகிறது.
தொகுதி பங்கீடு குழப்பம்
இந்த நிலையில் பிரேமலதா வரவால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு, காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அதே போன்ற கணக்கை 2026 தேர்தலிலும் தொடர விரும்புகிறது திமுக.
தேமுதிக திமுக கூட்டணி
ஆனால், இந்த முறை தேமுதிக மட்டுமல்லாமல், மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக பிரிவு, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் கூட்டணியில் இடம் பெறும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை 174-இல் இருந்து 170 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பகிர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை
ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, திமுக 170 தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும், காங்கிரஸுக்கு 25, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 6, மக்கள் நீதி மய்யம் 3, தேமுதிக 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம், பாமக (ராமதாஸ்) 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கடைசி நேரத்தில் இணையும் கட்சிகளுக்காக 2 அல்லது 3 தொகுதிகளை திமுக ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசிக மதிமுக அதிருப்தி
இதில் தான் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலாக ராமதாஸ், தேமுதிக, கமலஹாசன் ஆகியோர் வந்திருப்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு தொகுதிகளை கொடுத்தாலும் ஏற்கனவே கூட்டணியில் இருந்த மதிமுக,விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கட்சிகள் அதிருப்தி அடைய கூடும் என்பதாலும் கடைசி நேரத்தில் கூட்டணியில் குழப்பம் வரலாம் என்பதால் அந்த கட்சிகளை சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தைகளை திமுக தலைமை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications