சும்மா இருந்த சங்கு.. தேவையில்லாம சீண்டி கொந்தளிக்க வைத்த மாஜிக்கள்.. ரியாக்ஷனுக்கு ரெடியான ‘தலை’!
சென்னை : எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் சீண்டி வருவதால் திமுகவினர் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
அதிமுகவில் கடந்த ஒரு மாத காலமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் போக்கு கடுமையாக நிலவி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக நேரடியாக எந்த தலையீடும் செய்யவில்லை.
எதிர்க்கட்சியில் நிலவி வரும் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக திமுக அரசு பயன்படுத்திக்கொள்ளவில்லை எனப் பலரும் கூறினர். ஆனால், இப்போது ஈபிஎஸ் தரப்பினரின் தொடர் தாக்குதல்களால், திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.

அதிமுக மோதல்
அதிமுகவில் கடந்த ஒரு மாத காலமாக பிரச்சனைகள் உக்கிரமடைந்துள்ளன. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்து எழுந்த மோதல் காரணமாக ஜூன் 14ஆம் தேதி முதல் அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சிப்பது அணி மாறுவது என ஒட்டுமொத்த அதிமுகவுமே குழப்பத்தில் இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இடைக்கால பொதுச் செயலாளராகவும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஈபிஎஸ்.

தலையிடாத ஸ்டாலின்
அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனையில் வெளிப்படையாக யாருக்கும் எந்த ஆதரவும் கொடுக்காமல் அமைதி காத்தார் முதல்வர் ஸ்டாலின். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஸ்டாலினின் ஆதரவைக் கோரியதாக கூறப்பட்ட நிலையிலும், பொதுக்குழுவை நடத்தவோ, போலீஸ் பாதுகாப்பு வழங்கவோ எந்த இடைஞ்சலும் செய்யாமல், நடுநிலையாகவே நடந்துகொண்டார். அதிமுக விவகாரம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் பேச வேண்டாம் நிர்வாகிகளுக்கும் உத்தரவு போட்டார். அதிமுக குழப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்ய நினைக்காமல் முதல்வர் ஸ்டாலின் நாகரீகமாக நடந்து கொண்டது அரசியல் விமர்சகர்கள் பலரும் சுட்டிக்காட்டப்பட்டு பாராட்டப்பட்டது.

வம்பிழுத்த முன்னாள் அமைச்சர்கள்
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் சீண்டி வருகின்றனர். குறிப்பாக சி.வி.சண்முகம், ஜெயக்குமார் என பலரும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஸ்டாலின் உதவுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனாலும் கூட திமுக மேல்மட்ட தரப்பில் இருந்து ஈபிஎஸ்ஸுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. பொதுக்குழு குழப்பங்கள் தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஒரு வரியில் கமெண்ட் அடித்ததோடு சரி. வேறு எந்த பிரச்சனையிலும் தலையிடவில்லை.

சீண்டிய ஈபிஎஸ்
ஆனால், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் தொடர்பு வைத்துள்ளார். தி.மு.கவின் கைக்கூலியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். அதிமுகவில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும். வாழ் நாள் முழுவதும் ஆட்சியில் இருப்பதுபோல் ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார் என்று சரமாரியாக குற்றம்சாட்டினார்.

குளிர்காயும் திமுக
அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கைப்பற்றி, அப்போது ஏற்பட்ட மோதலால் அலுவலகத்திற்கே சீல் வைக்கும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்தை திமுக அரசு நிறைவேற்றுவதாகவும், எதிர்க்கட்சிப் பிரச்சனையில் ஸ்டாலின் குளிர்காய்கிறார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். நேரடியாக ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டும் பேசி வருகின்றனர்.

வரிந்துகட்டி
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த திமுக தலைமை, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ரியாக்ட் செய்ய அனுமதி அளித்து கண்ணசைத்துள்ளது. இதையடுத்து, உடனடியாக அதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபர அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் திமுகவை சுரண்டிப் பார்த்திருக்கிறார். எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு, திமுக மீது பாய்வது என்பது, திசைத் திருப்புகிற வேலை என பதிலடி கொடுத்துள்ளார்.

வெற்று வசனங்கள்
அதிமுகவைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள். அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு? பழைய பழனிசாமி ஜெயலலிதா - சசிகலா கால்களில் விழுந்து கிடந்தார்; புது பழனிசாமி மோடி - அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார் என புரட்டி எடுத்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி

மேஜைக்கு அடியில்
பழனிசாமி எதற்காகத் திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டிக் கொள்கிறார்? பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார்; புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார். பழைய கூவத்தூர் பழனிசாமி சசிகலாவின் கால்களை நோக்கித் தவழ்ந்தார்; புது வானகரப் பழனிசாமி, தரையில் தவழ்ந்து - கரன்சிகளைக் கொட்டிக் கொல்லைப்புறமாக நுழைந்து பெற்ற பதவியால் கொள்ளையடித்தப் பணத்தை, தனக்குத் தானே முடிசூட்டிக்கொள்ள வாரி இறைக்கிறார். ''இதில் நடக்காது ஸ்டாலின் அவர்களே'' என்று வெற்று வீராப்பு வசனம் வேறு. நடக்காது என்கிறீர்களே, நீங்கள் எப்போது நடந்தீர்கள் பழனிசாமி? கீழே குனிந்து, மேஜைக்கடியில் கால்களைத் தேடி, தரையில் தவழ்ந்து, நெடுஞ்சாண்கிடையாக சரணாகதி அடைந்து பதவியைப் பெற்றவர் என்பதுதானே உங்கள் வரலாறு என அட்டாக் செய்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி

அருகதை இல்லை
மேலும், எங்கே ஒரே ஒரு வார்த்தை, "பழைய பழனிச்சாமினு நினைச்சிக்கிட்டீங்களா, மோடி அவர்களே'' என்று பேசிப் பாருங்களேன். உங்களின் பழைய கதை, புதிய கதை என எல்லாக் குப்பைகளும் கிளறப்படும். அதன் நாற்றத்தை உங்கள் கட்சியினராலேயே தாங்க முடியாது. நடவடிக்கை எடுத்தவர்களிடம் மோதுவதற்குத் திராணியில்லாத - முதுகெலும்பில்லாத - மண்புழுவுக்கு இருக்கும் தன்மைகூட இல்லாத அரசியல்வியாதியான பழனிசாமிக்கு திமுகவையும், அதன் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்ப எந்த அருகதையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

சும்மா கிடந்த சங்கை
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக, அதிமுக மோதல் விவகாரத்தில் வெளிப்படையாக எந்தக் கருத்தும் சொல்லாமல், யாருக்கும் ஆதரவாகச் செயல்படாமல் இருந்த திமுகவை எடப்பாடி பழனிசாமியின் சகாக்கள் தொடர்ந்து சீண்டி, திமுகவை கொந்தளிக்கச் செய்துவிட்டனர். இனி அவர்களுக்கு எதிரான ரியாக்ஷன் கடுமையாக இருக்கும் எனக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications