3 மாவட்டங்கள்.. பிரிகிறதா திமுக - காங்கிரஸ் கூட்டணி? களத்தில் குஷியான அதிமுக தொண்டர்கள்!
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்கும் சூழல் உருவாகி வருவதால், அதிமுகவினர் களத்தில் குஷியாக பணியாற்ற தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதலே திமுக கூட்டணி இணக்கமாக இருந்து வரும் சூழலில், இந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டு வருகிறது. இதனை அதிமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்க முயன்று வருகிறது.
தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் ஆட்சியில் பங்கு என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். 2 ஆண்டுகளாக தமிழக அரசியலில் "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கையை தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுகவிடம் முன் வைக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டனர்.

அதேபோல் அதிமுகவில் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக பேசி வருகின்றன. மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி, தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்டு நெருக்கி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் தலைமையுடன் நேரடியாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச வேண்டிய சூழலுக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா? நிலைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவிடம் இருந்து காங்கிரஸ் கை நழுவி போகும் நிலையில் உள்ளது. அதிமுக பலமான கூட்டணி.. மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார். இது அதிமுகவினர் மத்தியில் புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவிற்கு செல்வாக்கு உள்ளது. அவர்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் போது எளிதாக வெற்றிபெறலாம். இந்தக் கூட்டணி பிரியும் பட்சத்தில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் களத்தில் அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications