திமுகவில் 110 மாவட்டங்கள் உருவாக்கம்.. சோழிங்கநல்லூர் தனி மாவட்டம்.. ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: திமுகவில் அமைப்பு ரீதியாக 110 மாவட்டங்கள் பிரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை மொத்தமாக 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதோடு, அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதியான சோழிங்கநல்லூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, சேலம், கோவை ஆகிய மாவட்டங்கள் தலா 5 ஆகவும், திருச்சி, கடலூர், ஈரோடு, திருப்பூர் ஆகியவை தலா 4ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22ஆம் தேதி நடந்த திமுக செயற்குழுவில் கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 77ல் இருந்து 110ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு, ஒருவர் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் திமுக சீனியர்கள் ஓரங்கட்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 13 முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் பதவியை இழப்பார்கள் என்று தெரிய வந்தது. அதேபோல் புதிதாக சுமார் 50 பேர் மாவட்டச் செயலாளராக பொறுப்புக்கு வருவார்கள் என்று தெரிய வந்தது. இந்த நிலையில் செயற்குழுவில் நிறைவேற்ற தீர்மானத்தை தொடர்ந்து, திமுகவில் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட 110 மாவட்டங்களின் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சென்னையில் மட்டும் மொத்தமாக 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சோழிங்கநல்லூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் - 3, நெல்லை 2 மாவட்டங்களாகவும், தூத்துக்குடி 3 மாவட்டங்களாகவும், தென்காசி 2 மாவட்டங்களாகவும், விருதுநகர் 3 மாவட்டங்களாகவும், சிவகங்கை 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராமநாதபுரம் 2 மாவட்டங்களாகவும், தேனி 2 மாவட்டங்களாகவும், திண்டுக்கல் 3 மாவட்டங்களாகவும், மதுரை 5 மாவட்டங்களாகவும், நீலகிரியில் 3 தொகுதிகளும் ஒரே மாவட்டங்களாகவும், ஈரோடு 4 மாவட்டங்களாகவும், திருப்பூர் 4 மாவட்டங்களாகவும், கோவை 5 மாவட்டங்களாகவும், கிருஷ்ணகிரி 3 மாவட்டங்களாகவும், தர்மபுரி 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாமக்கல் 3 மாவட்டங்களாகவும், சேலம் 5 மாவட்டங்களாகவும், புதுக்கோட்டை 3 மாவட்டங்களாகவும், கரூர் 2 மாவட்டங்களாகவும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் தலா ஒரு மாவட்டமாகவும், திருச்சி 4 மாவட்டங்களாகவும், திருவாரூர் மற்றும் நாகை தலா 2 மாவட்டங்களாகவும், நாகை ஒரு மாவட்டமாகவும், தஞ்சை, திருவண்ணாமலை, கடலூர் 4 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் 3 மாவட்டங்களாகவும், கள்ளக்குறிச்சி 2 மாவட்டங்களாகவும், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை தலா 2 மாவட்டங்களாகவும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் தலா 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 110 மாவட்டங்களின் அடிப்படையில் நகர், ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை அமைப்புகளை பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்கும் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
