ஐபேக் "ஐடியா" என்னாச்சு.. கொத்தாக வாரிசுகளுக்கு வாய்ப்பு.. பழைய "பார்முலாவை" மாற்றாத திமுக!
சென்னை: ஐபேக் நிறுவனம் ஆலோசனைப்படி இந்த முறை புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், வாரிசுகள் பலருக்கும் திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
வேட்பாளர் தேர்வில் பிரசாந்த் கிஷோர் தலையீடு அதிகம் இல்லை என்பதைத்தான் இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்த சட்டசபை தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

10 வருடம்
தி.மு.க. கடைசியாகப் பதவி வகித்தது, 2006-2011ம் காலகட்டமாகும். அப்போது, அமைச்சர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அமைச்சர்களாக இருந்த க. அன்பழகன், கோ.சி. மணி, வீரபாண்டி ஆறுமுகம், என். செல்வராஜ், கே.பி.பி. சாமி ஆகியோர் மரணமடைந்த நிலையில், பிறருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

சீனியர்களுக்கு வாய்ப்பு
அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஸ்டாலின், துரைமுருகன், கே. பொன்முடி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஐ. பெரியசாமி, என். சுரேஷ் ராஜன், எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே. ராமச்சந்திரன், வெள்ளக்கோயில் சாமிநாதன் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சீனியர்கள் புறக்கணிக்கப்படவில்லை.

ஏமாற்றம்
தி.மு.கவின் தற்போதைய சட்டசபை உறுப்பினர்கள் 97 பேரில் 82 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 பேருக்கு சான்ஸ் கிடைக்கவில்லை. திமுக மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு வாரிசு அரசியல் பற்றியது. எனவே பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என கூறப்படடது. ஆனால் ஏமாற்றம்தான்.

வாரிசு அரசியல்
திமுக தலைவர் தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு முதல் முறையாக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் களமிறங்குகிறார். இதேபோல, திண்டுக்கல் ஐ. பெரியசாமியின் மகன் பெ. செந்தில்குமார், டி.ஆர். பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜா, பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் பொதுச் செயலாளர் க. அன்பழகனின் பேரன் அ. வெற்றியழகன், அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷ் பொய்யாமொழி, பூங்கோதை ஆலடி அருணா, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், பூண்டி கலைவாணன், சபா ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் டிக்கெட் பெற்றுள்ளனர்.

புதிய வாரிசுகள்
உதயநிதி, செந்தில்குமார், வெற்றியழகன் போன்றவர்களுக்கு முதல் முறை சீட் தரப்பட்டுள்ளது. பிற வாரிசுகள் ஏற்கனவே தி.மு.கவின் சார்பில் போட்டியிட்டவர்கள், அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. திமுகவுக்கு கிட்டத்தட்ட இது வாழ்வா, சாவா போட்டி என்பதால், யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதால், தனது பழைய பாணியை கையில் எடுத்துள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.