ஐயோ மூச்சு திணறுதே.. வருமானத்திற்கு திட்டமே இல்லை.. தமிழக பாஜக துணை தலைவர் ஆதங்கம்
சென்னை: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வருவாய் ஈட்டும் திட்டங்கள் முன்னெடுக்காததால், தமிழக அரசியலில் திமுக தான் மூச்சு திணறிக்கொண்டிருப்பதாக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் தலைவராக 2வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் கவனமாக பேசி, செயல்படுமாறு அறிவுறுத்தியதோடு, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை கடுமையான விமர்சித்திருந்தார்.

பாஜக பற்றி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜக எதையும் செய்யும். எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழ் தனமான அரசியலுக்கும் செல்வார்கள். மதத்தை, ஆன்மிக உணர்வை தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறது பாஜக. அரசியலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால்தான் தமிழ்நாட்டில் மூச்சு திணறுகிறது பாஜக. அதிமுகவின் கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குளிர் காயப்பார்க்கிறது.

பொய் பரப்புரை
வலிமையான தலைமை அதிமுகவுக்கு அமையாததால், அதிமுக நான்கு பிரிவுகாளாக சரிந்து கிடைக்கிறது. திமுகவை எதிர்ப்பதை விட அதிமுகவிற்கு எந்த காலத்திலும் வேறு கொள்கை இல்லை. அதனால்தான் இன்று உணர்ச்சி இழந்து கிடக்கிறது. சாதனைகளை எடுத்து சொல்ல முடியாத பாஜகவும், சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பொய் பரப்புகளை கட்டவிழ்த்து விடுவார்கள். அதற்கு நமது சாதனைகளை பதிலாக சொல்ல வேண்டும். என்று பேசி இருந்தார்.

நாராயணன் திருப்பதி ட்வீட்
இதற்கு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், எந்த மொழியில் திமுக பேசுகிறதோ அதே மொழியில் பாஜக பேசவேண்டியது கட்டாயம். பாஜகவின் மக்கள் நல மற்றும் கட்டமைப்பு திட்டங்களினால் தான் தமிழக அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. தனக்கென எந்த வருவாய் ஈட்டும் திட்டங்களையும் இந்த ஒன்றரை வருடத்தில் திமுக அரசு முன்னெடுக்கவில்லை.

திமுக திணறுகிறது
ரம்ஜானுக்கும், கிறுஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் , தீபாவளிக்கும் மற்ற ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லாமல் இருப்பதோடு, ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக, ஹிந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசியதால் ஹிந்துக்கள் கொதித்தெழுந்து விமர்சிப்பதால், தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுக தான் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications