மே 2ம் தேதிக்கு பிறகு ஆக்ஷன்.. ஸ்டாலினுக்கு போகும் பட்டியல்.. கலக்கத்தில் நிர்வாகிகள்!
சென்னை: தேர்தல் பணி செய்யாமல் ஒதுங்கிய அதிருப்தியாளர்களின் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின். கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மீது மே 2ம் தேதிக்கு பிறகு நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். இதனால் தேர்தல் பணியில் டிமிக்கி கொடுத்தவர்கள் கலக்கத்தில் உள்ளார்களாம்.
ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் இதுவரை இல்லாத புதிய டெக்னிக்கை பயன்படுத்தின.
அதாவது தேர்தல் நிபுணர்களை துணைக்கு வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி பல்வேறு யுக்திகள் எதிரணிகளுக்கு எதிராக வகுக்கப்பட்டு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. விளம்பரங்களும் செய்யப்பட்டன. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தாக்கமும் இருந்தன.

தேர்தல் முடிவு
தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் ஏப்ரல் 29ம் தேதி வரை தடை விதித்துள்ளதால் யாருக்கு சாதகமாக மக்கள் வாக்களித்தார்கள் என்ற தகவல்களை இதுவரை ஊடகங்கள் வெளியிடவில்லை.

ஐபேக் ரிப்போர்ட்
இந்த சூழலில் சட்டசபைதேர்தலில் முந்தைய தேர்தல்களைவிட குறைவான அளவே வாக்குப்பதிவு நடந்திருந்தது. இதனால் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும், அல்லது யாருக்கு பாதகமாக இருக்கும் என்பது தெரியவில்லை. இதுபற்றி திமுகவிற்கு ஐபேக் கொடுத்த ரிப்போர்ட்டின் படி, திமுகவிற்கு எதிர்பார்த்தைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதாம். 200 தொகுதிகள் வரை கிடைக்கக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறதாம்.

ஸ்டாலின் ஹேப்பி
பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் தலைமை அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென விசிட் அடித்த ஸ்டாலின், தேர்தல் பணிக்காக நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் ரிப்போர்ட் குறித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினாராம்.

ஸ்டாலினுக்கு போன பட்டியல்
தற்போது மிகவும் உற்சாகத்தில் உள்ள ஸ்டாலின் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக குறைந்துள்ளது குறித்து தங்களது மாவட்ட செயலாளர்களிடம் ரிப்போர்ட் கேட்டாராம். அதன்படி அவர்களும் தகவல்களை கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் தேர்தல் பணி செய்யாமல் ஒதுங்கிய அதிருப்தியாளர்களின் பட்டியலையும் ஸ்டாலின் கேட்டாராம். அவர்களின் லிஸ்டும் எடுக்கப்பட்டு வருகிறதாம். அவர்கள் மீது மே 2ம் தேதிக்கு பிறகு நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். இதனால் தேர்தல் பணியில் டிமிக்கி கொடுத்தவர்கள் கலக்கத்தில் உள்ளார்களாம்.