"இங்க அடிச்சா அங்க வலிக்குதே!" துரைமுருகன் விவகாரத்தை ஆறபோட்டாரா ஸ்டாலின்?
சென்னை: திமுக பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டி.ஆர். பாலுவோ அல்லது ஆ. ராசாவோ நியமிக்கப்படலாம் என்றும், திமுக துணைப் பொதுச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபட்டு வருகிறது.
துரைமுருகனுக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும், அடிக்கடி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும், திமுகவில் 70 வயதைக் கடந்தவர்களே பல பத்தாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருவதால், அவர்களை மாற்றிவிட்டு கட்சிக்கு இளரத்தம் பாய்ச்ச வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கருதுவதாகவும் பேசப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் - கட்சிப் பதவி, பிரதிநிதித்துவம் உள்ளிட்டவைகளை இந்த சீனியர்களும், அவர்களது வாரிசுகளுமே பங்கிட்டுக் கொள்வதால், மற்ற நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தி அடையாமல் இருப்பதற்காகவும், அவர்களது நியாயமான காத்திருப்புக்கு ஒரு பலனை அளிப்பதற்காகவும் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
துரைமுருகன்
இந்தத் திட்டத்தை முதலில் துரைமுருகனிடமிருந்தே தொடங்கலாம் என ஸ்டாலின் யோசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் துரைமுருகன் வடமாவட்டங்களில் முக்கியமானவர். அவர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்.
துரைமுருகனை நீக்க திட்டம்
துரைமுருகனை நீக்குவதற்கு வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரை நீக்கினால், வன்னிய சமூகத்தின் வாக்குகள் திமுகவுக்குப் போதிய அளவு கிடைக்காமல் போய்விடும் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலின் என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
அண்ணா அறிவாலயம்
ஆனால் இதுகுறித்து அண்ணா அறிவாலய வட்டாரங்களில் கேட்டபோது, "துரைமுருகன் எவ்வளவு பெரிய சீனியர். அவர் வேலூர் மாவட்டத்தில் சக்தி வாய்ந்தவர். அவரை எப்படி நீக்குவார்? அனுபவசாலிகள் தலைமைப் பதவியில் இருந்தால்தானே கட்சிக்கு வளர்ச்சி?
ஸ்டாலின்
பிறகு ஸ்டாலின் எப்படிப் புது ரத்தத்தைப் பாய்ச்சுவார்? துரைமுருகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மைதான். பொதுவாக இது போன்ற நிர்வாகிகள் மாற்றம் என்பது பொதுக்குழுவில் வைத்துதான் நடக்கும். திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியைக்கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்குழுவைக் கூட்டித்தான் அறிவித்தார்கள்.
மதுரை பொதுக் குழு கூட்டம்
அப்படிப் பார்த்தால், மதுரையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதியே பொதுக்குழு கூட்டம் நடந்துவிட்டது. நீங்கள் கேட்பது போல் மாற்றங்கள் செய்வதாக இருந்தால், அப்போதே தலைவர் (ஸ்டாலின்) அறிவித்திருப்பாரே! எப்போது பொதுக்குழு கூடினாலும் இது போன்ற வதந்திகள் வரத்தான் செய்கிறது.
வதந்தி
பல்வேறு கட்சிகளில் ஊழல், உட்கட்சிப் பிரச்சினை நடந்து வருகிறது. திமுகவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்காக இப்படி நிர்வாகி மாற்றம் குறித்து யாரோ கிளப்பி விடுகிறார்கள். அதையும் நம்பிக்கொண்டு வந்து எங்களைக் கேட்கிறீர்களே," எனக் கோபித்துக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications
