அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி நீதிமன்றம்.. திமுக தேர்தல் அறிக்கையில் தடாலடி
சென்னை: அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டார். இதில், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. எனவே இந்த விஷயத்தை பிரதான ஆயுதமாக கையில் எடுத்து திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளுந்தம் பருப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ரேஷன் கடைகளில், உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும். அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். பணியில் உயிரிழந்தால், காவலர்கள் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் வழங்கப்படும்.

பால் விலை குறைப்பு
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக சிறப்பு வீட்டுவசதித் திட்டம் கொண்டு வரப்படும். நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். ஆவின் பால் லிட்டருக்கு ரூ 3 குறைக்கப்படும்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
கிராமத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும். சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும், கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஓய்வூதியம் உயர்வு
முக்கியமான மலைக் கோயில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி தரப்படும். 50 வயதை கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும். கலைஞர் உணவகம் 500 இடங்களில் அமைகிறது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.