அத்துமீறும் திமுகவினர்.. உடனே கட்சியில் இருந்து நீக்குங்க.. முதல்வர் ஸ்டாலினை சாடிய ஜெயக்குமார்
சென்னை: ‛‛திமுக அமைச்சர், எம்எல்ஏ, எம்பிக்களை போல் திமுகவின் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் அடாவடித்தனத்துடன் அத்துமீறி நடக்கின்றனர். இவர்களை பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் ஸ்டாலின் நீக்க வேண்டும். தாலிக்கு தங்கத்தை நிறுத்திய திமுக அரசின் மாணவிகளுக்கான மாதம் ரூ.1000 திட்டம் என்பது யானை பசிக்கு சோளப்பொறி போன்றதாகும்'' என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில் தான் இன்று சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது அவர் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி ஜெயக்குமார் கூறியதாவது:

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்திவைப்பு
அதிமுக ஆட்சியில் 7 ஆயிரம் கோடியில் கிட்டத்தட்ட 14 லட்சம் பயனாளிகளுக்கு கிராமப்புற, நகர்புற ஏழை எளிய மக்களுக்காக தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்பட்டது. தாலி, பணம் உள்ளிட்ட பிரச்சனையில் இருக்கும் பெண்களுக்கு உதவும் இந்த திட்டம் உன்னதமானது. இந்த திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. இந்த திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படித்த பெண்கள், டிகிரி முடித்த பெண்கள் என அனைவருக்கும் ஒரு சவரன் வழங்கப்பட்டது. அதோடு டிகிரி முடித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், பிளஸ் 2 முடித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. இது வரவேற்க்கத்த திட்டமாகும். இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டனர்.

யானை பசிக்கு சோளப்பொறி
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் எந்த கல்லூரியில் படித்தாலும் அனைவரும் பயனாளிகளாக கருதி திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை திமுக அரசு சின்னாப்பின்னமாக்கி உள்ளது. அந்த திட்டம் இல்லை. தாய்மார்களின் கோபத்தை பெறும் அளவுக்கு திட்டத்தை மூடிவிட்டனர். வெறுமனே 12ம் வகுப்பு முடித்து டிகிரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 என கணக்கிட்டு ஒரு திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கூட இந்த திட்டம் கிடையாது. 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த நிலையில் யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல் அதிமுகவின் திட்டத்தை மூடிவிட்டு ஏதோ ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ரூ.1000 திட்டம் கொண்டு வந்தாலும் தாலிக்கு திங்கம் திட்டத்தை ஏன் மூடினார்கள்.

ஓசி என கூறிய அமைச்சர்
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விலையில்லா பொருட்கள் கொடுத்தார். அதனை இலவசம் என்றால் கொச்சைப்படுத்துவது போன்றதாக இருக்கும் என நினைத்த மதிநுட்பம் வாய்ந்த தலைவர் ஜெயலலிதா விலையில்லா என்ற சொல்லை கண்டுபிடித்து கூறினார். ஆனால் திமுக ஆட்சியில் ஓசி என கூறுகிறார்கள். இந்த ஓசி எனும் சொல் எவ்வளது விமர்சனத்துக்கு உள்ளானது என்பது உங்களுக்கு தெரியும். ஓசி என்பதை விளையாட்டாக கூறியதாக அமைச்சர் பொன்முடி கூறுகிறார். விளையாட்டாக கூற வேண்டிய சொல்லா இது. தற்போது பெண்கள் பஸ்சில் ஏறினால் ஓசி என ஒவ்வொருவரும் கூறுகின்றனர். இந்த நிலையை தான் அமைச்சர் பொன்முடி உருவாக்கி உள்ளார்.

மேயரிடம் தரக்குறைவான நடவடிக்கை
இதனால் முதல்வர் என்ற முறையில் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடியை கூப்பிட்டு கண்டிக்க வேண்டும். அமைச்சர் கேஎன் நேரு, ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த மேயரை தரக்குறைவாக நடத்துகிறார். ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மேயர் என்றால் கேவலமாக போய்விட்டதா?. மேயரை, பண்ணையார் பாணியில் அதிகார தொனியில் அமைச்சர் கேஎன் நேரு பேசியுள்ளார். இதில் மேயரே மனக்கஷ்டப்பட்டு இருப்பார்.

திமுகவின் அடாவடி
அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை போல் திமுகவின் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் நாங்களும் சலித்தவர்கள் இல்லை எனக்கூறி மக்களிடம் அடாவடித்தனத்துடன் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். உடனடியாக எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்களை கூப்பிட்டு பொதுமக்கள் பாதிக்கும் வகையில் செயல்படுபவர்களை முதல்வர் கண்டித்திருக்க வேண்டும். மேலும் அமைச்சர்களின் செயல்பாடு பொதுமக்களை கேலி கிண்டலுக்கு உள்ளாக்குவதில் எல்லையின்றி உள்ளது என கண்டித்திருக்க வேண்டும். மேலும் இனிமேல் இப்படி செய்தால் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்குவேன் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அறிக்கை விட்டிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்று பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பேசி இருக்க முடியுமா?. ஒருவேளை பேசி இருந்தால் பதவியில் நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications