பொங்கல் அன்று எஸ்பிஐ தேர்வு.. தேதியை மாற்ற கோரும் தமிழ்நாட்டு தேர்வர்கள்.. திமுக எம்.பி அவசர கடிதம்!
சென்னை : ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கி முதன்மைத் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வரும் ஜனவரி 15ஆம் தேதி அன்று கிளார்க் பணியிடத்திற்கான முதன்மைத் தேர்வை நடத்துவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நகரங்களில் மட்டுமே முதன்மைத் தேர்வு நடைபெறும் என்பதால், பொங்கல் பண்டிகையின்போது தேர்வு எழுதுவதும், நீண்ட தூரம் பயணிப்பதும் கடினம் என்பதால், இந்த தேர்வினை வேறு தேதியில் மாற்றி வைக்குமாறு தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டேட் வங்கி தேர்வு
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 5008 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுகள் நாடு முழுவதும் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றன. இதில் தமிழ்நாட்டில் 355 காலிப் பணியிடங்கள் உள்ளன. முதல்நிலைத் தேர்வ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையடுத்து முதன்மை தேர்வு ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் அன்று
ஸ்டேட் வங்கி முதன்மைத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 15ஆம் தேதி அன்றுதான் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக பண்டிகை தினத்தில் தேர்வு நடத்தப்படாது. இந்த ஆண்டு விடுமுறை நாளில் பொங்கல் பண்டிகை வருவதை கவனிக்காமல் இந்த தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தேர்வர்கள் கோரிக்கை
பொங்கல் பண்டிகை அன்று அதனைக் கொண்டாடும் மனநிலையில் இருப்பதால் தேர்வர்கள் தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்படும். அதோடு, தமிழ்நாட்டின் 13 நகரங்களில் மட்டுமே முதன்மைத் தேர்வு நடைபெறும் என்பதால், பொங்கல் பண்டிகையின்போது தேர்வர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யவும் நேரிடும். எனவே, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு பதிலாக வேறு ஒரு நாளில் முதன்மைத் தேர்வை நடத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திமுக எம்.பி கடிதம்
இந்நிலையில், பொங்கல் பண்டிகை நாளில் அறிவிக்கப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கி முதன்மைத் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 15-ல் எஸ்பிஐ வங்கி கிளர்க் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications