நாற்பதும் நமதே -நாடும் நமதே! களம் காண்போம் -வெற்றிகளைக் குவிப்போம்! ஸ்டாலின் கடிதம்!
சென்னை: நாற்பதும் நமதே -நாடும் நமதே எனக் குறிப்பிட்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு களமாற்றுமாறு திமுக தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
விருதுநகர் முப்பெரும் விழாவில் பங்கேற்ற அனுபவத்தை சுட்டிக்காட்டி அவர் எழுதிய கடிதத்தில் இதனைக் கூறியிருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு;

மன நிறைவுடன்
செப்டம்பர் 15 அன்று காலையில், மதுரையில் உள்ள ஆதிமூலம் அரசு தொடக்கப்பள்ளியில் காலைச் சிற்றுண்டி எனும் செறிவான திட்டத்தைத் தொடங்கி வைத்து, நம்முடைய அரசு இந்தியத் துணைக் கண்டத்திற்கே முன்மாதிரியான முற்போக்கு அரசு என்பதை மீண்டும் மெய்ப்பித்திடும் வாய்ப்பினைப் பெற்று, மனநிறைவுடன் விருதுநகர் நோக்கிப் புறப்பட்டேன்.

மக்கள் கடலில் நீந்தி
"எங்களைப் பார்" என்பதுபோல இருபுறமும் பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் திரண்டிருந்தனர். அன்புக் கரம் நீட்டி, ஆனந்தக் குரல் எழுப்பினர். இன்முகத்துடன் - புன்சிரிப்புடன் அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, மக்கள் கடலில் நீந்தியபடி விழா மேடைக்கு நானும் கழக முன்னோடிகளும் வந்து சேர்ந்தோம்.

மேடைக்கு வரமுடியவில்லை
மேடையில் அமர்ந்திருந்தபோது, எதிரே கண்ணுக்குத் தெரிந்த வரை உடன்பிறப்புகளின் இனிய முகங்கள்தான். பந்தலைக் கடந்து, நெடுஞ்சாலை வரை அடர்த்தியாக நிறைந்திருந்தனர். வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. அதனால் நமது கழகப் பொருளாளர் - விழாவில் கலைஞர் விருது பெற்ற அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள் நிகழ்ச்சி தொடங்கிய பிறகும் மேடைக்கு வந்து சேர இயலாமல் மக்கள் கடலில் உற்சாகமாக நீந்திக் கொண்டிருந்தார்.

4041 கடிதங்கள்
4041 கடிதங்களை 21,510 பக்கங்களில் 54 தொகுதிகளாக சீதை பதிப்பகம் கௌரா ராஜசேகர் தொகுத்திட, அந்த வரலாற்று ஆவணத்தை விழா மேடையில் வெளியிட்டு பெருமை கொண்டேன். நம் உயிர்நிகர் தலைவரின் எழுத்தோவியங்களைப் பத்திரப்படுத்தி - பாதுகாப்பாக வைத்திருந்து - சரிபார்த்து - அச்சுக்கு அனுப்பும்வரை தன் கடமையைச் செய்து, அந்தக் கடமையை நிறைவு செய்தபிறகு இந்த உலகை விட்டு விடைபெற்ற சகோதரர் சண்முகநாதன் அவர்களின் நினைவில் சில நொடிகள் மூழ்கிவிட்டேன்.

மாநில உரிமைகள்
மாநில உரிமைகளைக் காப்பதற்கும் நம் மக்களுக்கான திட்டங்களைத் தடையின்றி நடத்துவதற்கும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஒன்றிய அரசு அமைந்தாக வேண்டும். அதற்கான களமாக நாடாளுமன்றத் தேர்தல் அமையவிருக்கிறது. அந்தக் களத்திற்கு நாம் இப்போதிருந்தே ஆயத்தமாக வேண்டும். விருதுநகர் முப்பெரும் விழா அதற்கான பாசறைப் பயிற்சிக் களமாக அமைந்திருக்கிறது.

பாஜக அரசின் இரட்டை ஆட்சி
மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் இரட்டை ஆட்சி முறைக்கு முடிவு கட்டிட, மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டிட, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்றிட, நாடு முழுவதுற்கும் 'திராவிட மாடல்' தேவைப்படுகிறது. அதற்கான முழக்கமாகத்தான் 'நாற்பதும் நமதே-நாடும் நமதே' என்று அந்த மேடையில் உங்களின் குரலாக நான் முழங்கினேன்.

தொடர் வெற்றிகள்
முப்பெரும் விழாவில் உங்கள் முகம் கண்டு மனம் மகிழ்ந்ததுடன், உடன்பிறப்புகளாம் உங்களின் மீதுள்ள முழு நம்பிக்கையினால் இந்த முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறேன். தொடர் வெற்றிகளைக் காண்பதற்கு, விருதுநகர் ஒரு நல்ல தொடக்கம். அது வெற்றிக் களத்திற்கான முரசொலி; களம் காண்போம்; வெற்றிகளைக் குவிப்போம்!












Click it and Unblock the Notifications