கனிமொழிக்கு ப்ரொமோஷன்? நவம்பர் 15க்குள் திமுகவில் நடக்கும் அதிரடி.. மும்முரமாக இருக்கும் ஸ்டாலின்!
சென்னை: நவம்பர் மாதத்திற்குள் கட்சி ரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுத்துவிட வேண்டும் என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திலேயே திமுகவில் 110 மாவட்டங்களாக பிரித்துவிட்ட சூழலில், மாவட்டச் செயலாளர்கள் நியமனம் ஏன் நடக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனத்துடன், கனிமொழிக்கும் புரொமோஷன் கொடுக்க ஆலோசனை நடப்பதாக சொல்லப்படுகிறது.
திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இளைஞரணியில் செய்ய வேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுடம் அந்த குழு ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து மருத்துவ அணியிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்ட, இன்னொரு பக்கம் ஸ்டாலினும் தீவிர ஆலோசனையில் இறங்கி இருக்கிறார்.

இதுதொடர்பாக விசாரித்த போது நவம்பர் மாதத்தில் கட்சி ரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுத்துவிட வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுகவில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 110ஆக உயர்த்தி ஆகஸ்ட் 28ஆம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் மாவட்டச் செயலாளர்கள் பதவி கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இடைத்தேர்தல் வந்ததால், மறுசீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது ஸ்டாலினிடம் பலரும் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் காரணமாக நவம்பர் 15ஆம் தேதிக்குள் மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்கும் முடிவில் ஸ்டாலின் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளி வரும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் பொதுச்செயலாளர் துரைமுருகனை ராஜினாமா செய்ய வைக்கும் முடிவுக்கு திமுக தலைமை வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்தக் கட்டமாக கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு ப்ரொமோஷன் அளிக்கப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.
இதனால் கனிமொழி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் கனிமொழிக்கு திமுக தலைமை முக்கியத்துவம் அளித்து வருகிறது. மகளிரணி சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் திமுகவின் முதல் பெண் பொதுச்செயலாளர் என்ற பெருமையை கனிமொழி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
